அண்ணாநகர் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற காவலர்..!! கமிஷ்னர் உடனே வர வேண்டும் என அடம்பிடித்ததால் பரபரப்பு..
சென்னை அண்ணாநகர் டவர் பார்க் மீது ஏறி காவலர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது சுமார் இரண்டரை மணி நேரமாக பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அவரை காப்பாற்றினர்.
சென்னை அண்ணாநகர் டவர் பார்க்கில் நேற்று மாலை 4:30 மணி அளவில் திடீரென காக்கி சட்டை அணிந்த காவலர் ஒருவர் டவரின் உச்சிமீது ஏறி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தார். இதனால் அங்குள்ள பொதுமக்கள் அச்சமடைந்து உடனடியாக தீயணைப்புத் துறையினர் மற்றும் அண்ணாநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் அண்ணாநகர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தற்கொலை மிரட்டல் விடுத்த காவலரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஆனால் அந்தக் காவலரோ, உடனடியாக காவல் ஆணையர் எனது கோரிக்கையை கேட்க இங்கு வரவேண்டும் எனவும், என்னை மீட்கும் பணியில் ஈடுபட்டால் மேலிருந்து குதித்து விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு நிலவியது. சுமார் இரண்டரை மணி நேரமாக அந்த காவலரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை சமாதானம் செய்து கீழே இறக்கி வந்தனர்.
இதனையடுத்து தற்கொலை மிரட்டல் விடுத்த அந்த காவலரிடம் விசாரணை நடத்தியதில், அவரது பெயர் பரீக் பாட்ஷா(25) என்பதும் மெட்ரோ ஸ்டேஷனில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர் என்பதும் தெரிய வந்தது. மேலும் எதற்காக தற்கொலை மிரட்டல் முயற்சியை கையில் எடுத்தார் என பல மணிநேரமாக கேட்டும் அவர் எந்த பதிலும் அளிக்காமல் மௌனமாகவே இருந்துள்ளார். இதனையடுத்து போலீசார் மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். பணிச்சுமை அல்லது வேறு ஏதேனும் காரணமா என தொடர்ந்து அண்ணாநகர் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.