மாணவரை துடைப்பத்தால் அடித்த சமையலர், சத்துணவு உதவியாளர் கைது

 
ச்

முட்டை கேட்ட மாணவர் மீது துடைப்பத்தால் தாக்குதல் நடத்திய சமையலர் லட்சுமி மற்றும் உதவியாளர் முனியம்மாள் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த செங்குணம் கொள்ளை மேடு பகுதியில் போளூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் தமிழக அரசின் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 44 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட இரண்டு ஆசிரியர்கள் பணி புரிந்து வருகின்றனர். இதில் பள்ளி மாணவர்களுக்கென சத்துணவு கூடம் அமைக்கப்பட்டு தமிழக அரசால் சத்துணவு வழங்கப்பட்டு வருகின்றது. அதில் முட்டை தினமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணியை சத்துணவில் பணிபுரியும் சமையல லட்சுமி மற்றும் உதவியாளர் முனியம்மாள் ஆகியோர் தொடர்ந்து வழங்கி வருகின்றனர். இவர்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சரிவர முட்டை வழங்காமல் இல்லை என கூறி வந்ததாகவும் இதனால் ஒரு மாணவன் உள்ளே சென்று சமையலறையில் சோதனை செய்தபோது உள்ளே முட்டைகள் இருந்துள்ளது. இது குறித்து சமையல் உதவியாளரிடம் ஒரு மாணவன் ஏன் முட்டை இல்லை என சொல்கின்றனர் என கேள்வி கேட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த சமையலர் லட்சுமி மற்றும் சமையல் உதவியாளர் முனியம்மாள் பள்ளி மாணவனை அனுமதியில்லாமல் எப்படி சமையலறையை உள்ளே சென்று பார்த்தாய் எனக்கூறி துடைப்பத்தால் தாக்கினர். 


முட்டை கேட்ட மாணவர் மீது துடைப்பத்தால் தாக்குதல் நடத்திய வீடியோ வெளியான நிலையில் சமையலர் லட்சுமி மற்றும் உதவியாளர் முனியம்மாள் பணிநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் தற்போது சம்பந்தப்பட்ட சமையலர் மற்றும் உதவியாளரை கைது செய்து போளூர் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.