பள்ளியில் சர்ச்சை பேச்சு : மகாவிஷ்ணுவிடம் தீவிர விசாரணை..
ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா திரும்பிய பேச்சாளர் மகா விஷ்ணுவிடம், சென்னை விமான நிலையத்தில் வைத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் பரம்பொருள் பவுண்டேஷனைச் சேர்ந்த மகாவிஷ்ணு என்பவரை, மாணவர்களுக்கு மோட்டிவேஷனல் ஸ்பீச் வழங்குவதற்காக சிறப்பு விருந்தினராக பள்ளி நிர்வாகத்தினர் அழைத்துள்ளனர். ஆனால் சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மாணவ மாணவியர் முன்னிலையில் முன் ஜென்மத்தில் செய்த தவறுகளால்தான் மாற்றுத்திறனாளிகளாக, ஏழைகளாக இருக்கிறார்கள் என்றும், இந்த ஜென்மத்தில் கண், கை, கால் இல்லாமல் பிறந்தவர்கள் கடந்த ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள் என்றும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அத்துடன் சொற்பொழிவு ஆற்றிய மகா விஷ்ணுவின் பேச்சுக்கு பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர் கண்டனம் தெரிவித்தார். ஆனால் அவரிடமும் மகா விஷ்ணு உரத்தக்குரலில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு நடத்தினார். 4 நாட்களுக்குள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி, பணியிட மாற்றம் செய்யப்பட்டதோடு, இவ்விவகாரத்தில் விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அரசுப் பள்ளியில் பிற்போக்குத்தனமான பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, மாற்றுத்திறனாளி ஆசிரியரை அவமதித்ததாக பல்வேறு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த விவகாரம் குறித்து சைதாப்பேட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்த மகாவிஷ்ணு, எங்கும் ஓடி ஒளியவில்லை என்றும், இன்று மதியம் 1 மணிக்கு சென்னை வர உள்ளதாகவும், பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷை நேரில் சந்தித்து எனது தரப்பு விளக்கத்தை அளிப்பேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் தொடர்பாக , ஆஸ்திரேலியாவிலிருந்து சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவிடம், சென்னை விமான நிலையத்தில் வைத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சைதாப்பேட்டை உதவி ஆணையர் ஸ்ரீனிவாசன் தலைமையிலான போலீசார் மகாவிஷ்ணுவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை ஓட்டி சென்னை விமான நிலையத்தில் போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர். ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதை ஒட்டி மகாவிஷ்ணு கைதாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.