விவசாயிகளுக்கு கட்டுப்பாட்டு அறை, வாட்ஸ்அப் அலர்ட்..!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பயிர்களைப் பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. இது தொடர்பாக இன்று வேளாண்மை உற்பத்தி ஆணையர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், தினசரி வானிலை ஆலோசனைகள் வழங்குதல், பயிர் காப்பீட்டில் விவசாயிகளைப் பதிவு செய்தல், போதுமான உரம் மற்றும் விதைகளை இருப்பு வைத்தல் உள்ளிட்ட 6 முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மாவட்ட அளவில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைகளை அமைக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூட்டத்தில் போடப்பட்ட 6 முக்கிய உத்தரவுகள்:
1. தினமும் வானிலை அறிவிப்பு: உழவர் செயலி மற்றும் வாட்ஸ்அப் மூலம் விவசாயிகளுக்கு வரும் வானிலை சார்ந்த பயிர் ஆலோசனைகளை தினமும் வழங்க வேண்டும்.
2. TNAU திட்டம் ரெடி: அசாதாரண மழையால் பயிர் சேதம் ஏற்படாமல் இருக்க தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் (TNAU) தயாரித்துள்ள மாற்று பயிர் திட்டத்தை (Contingency Plan) உடனே செயல்படுத்த வேண்டும்.
3. விதை, உரம் ஸ்டாக் இருக்கா?: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான தரமான விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை போதுமான அளவில் இருப்பு வைக்க வேண்டும்.
4. 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை: மாநிலம், மாவட்டம், வட்டாரம் என மூன்று இடங்களிலும் கட்டுப்பாட்டு அறை அமைத்து, தினமும் பயிர் சேத விவரங்களை அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.
5. வயலில் தண்ணீர் தேங்கினால்?: கனமழையால் வயலில் நீர் சூழ்ந்தால் உடனடியாக வடிகால் வசதி செய்து, வரப்புகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
6. பயிர் காப்பீடு கட்டாயம்: சம்பா பருவத்தில் எதிர்பாராத பயிர் இழப்புகளை சமாளிக்க பிரதான் மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் (PMFBY) விவசாயிகளை பதிவு செய்ய வைக்க வேண்டும் என அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது.

