"போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து நடவடிக்கை" - அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

 
ttn

தமிழ்நாட்டில் கனமழை நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு தமிழ்நாடு மற்றும் ஆந்திரா கடற்கரைக்கு இடைப்பட்ட பகுதியில் சென்னை அருகே இன்று மாலை கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  கடந்த 24 மணிநேரத்தில் 38  மாவட்டங்களில் மழை பெய்துள்ளது.  மாநிலத்தில் சராசரி மழை அளவு 21.02 மில்லிமீட்டர் செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகபட்சமாக 130.64 மில்லிமீட்டர் பதிவாகியுள்ளது. இரண்டு இடங்களில் அதி கனமழையும், 19 இடங்களில் மிக கனமழையும் ,39 இடங்களில் கன மழையும் பெய்துள்ளது.இதனால் முக்கிய நீர்த்தேக்கங்களில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. செங்குன்றத்தில் இருந்து 3 ஆயிரம் கன அடியும் ,செம்பரம்பாக்கத்தில் இருந்து 2,151 கன அடியும், பூண்டி ஏரியில்  இருந்து 6 ஆயிரம் கன அடி திறந்துவிடப்பட்டுள்ளது. 

rain

இன்று சென்னை ,திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, சேலம் ,வேலூர் ,திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் அதி கனமழையும்,  காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, அரியலூர் ,பெரம்பலூர் ,தர்மபுரி ,ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மிக கனமழையும்  பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chennai rain

பேரிடர்களின் போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தும் பொருட்டு தேசிய பேரிடர் மீட்புப்  படையின் 10 குழுக்கள் கடலூர், நாகப்பட்டினம் ,மதுரை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு தலா ஒரு குழுவும் , செங்கல்பட்டு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியில் தலா மூன்று குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.  அதேபோல் தஞ்சாவூர், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு தலா 2  குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பகுதியில் 1961 நபர்கள் 41 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 21 லட்சத்து 2 ஆயிரத்து 120 பேருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு ,காஞ்சிபுரம், நாகப்பட்டினம் ,பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர் மாவட்டங்களில் மொத்தம் 162 முகாம்களில் 9312 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.