ஆர்எஸ்எஸ் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு- உள்துறை செயலாளர், டிஜிபி ஆஜராக உத்தரவு

 
பல்வேறு மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி - போலீஸார் பலத்த பாதுகாப்பு..

அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்காத காவல் துறைக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Highcourt

நாட்டின் 76வது சுதந்தர தினம், விஜய தசமி மற்றும் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் 22 மற்றும் 29ம் தேதிகளில் தமிழகத்தின் 33 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ்.  சார்பில் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார். பின்னர், ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலங்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி அக்டோபர் 16ஆம் தேதி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், நீதிமன்றம் உத்தரவிட்டும் ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதிக்கவில்லை எனக்கூறி ஆர்.எஸ்.எஸ். சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்.எஸ்.எஸ். சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபால் ஆஜராகி, நீதிமன்றம் உத்தரவிட்டும் அணிவகுப்புக்கு அனுமதி வழங்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை எதுவும் விதிக்கவில்லை என்பதால் மனு மீது வாதிட அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். காவல்துறை சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாகவும், அந்த மனு நாளை மறுநாள் விசாரணைக்கு வர உள்ளதாகவும் கூறினார். 

இதனையடுத்து, நீதிமன்றம் உத்தரவிட்டும் அணிவகுப்புக்கு அனுமதி அளிக்காதது அரசின்  நிர்வாக திறமையின்மையை வெளிகாட்டுவதாகவும் , நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளிக்க விரும்பாததையே இது காட்டுவதாகவும் அதிருப்தி தெரிவித்தார். மேலும், மனு குறித்து நான்கு வாரங்களில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி, உள்துறை செயலாளர், டிஜிபி-க்கு  உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.