பல பெண்களுடன் தொடர்பு.. விட்டுச்சென்ற மனைவி.. கடந்த மாதமே தற்கொலைக்கு முயன்ற சிவராமன்.. என்ன நடந்தது?
கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன், கடந்த ஜூலை மாதமே தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் போலியாக என்.சி.சி முகாம் நடத்தி 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நாதக முன்னாள் நிர்வாகியான, போலி என்.சி.சி. மாஸ்டர் சிவராமன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தலைமறைவான சிவராமனை 19ம் தேதி போலீஸார் கோவையில் வைத்து கைது செய்தனர். முன்னதாக போலீசார் தேடுவதை அறிந்த சிவராமன் கைதாவதற்கு முன்பே எலி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இதனைத்தொடர்ந்து போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற போது கால் உடைந்ததை அடுத்து, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவ சோதனையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிவராமனுக்கு மூச்சு திணறல் அதிக அளவில் இருந்ததன் காரணமாக மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் இரவு அவர் கொண்டுவரப்பட்டார். நேற்று முழுவதும் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை 5:30 மணி அளவில் சிவராமன் சிகிச்சை பலனின்றி உயிழந்தார். இந்த நிலையில் உயிரிழந்த சிவராமன் கடந்த ஜூலை மாதமே தற்கொலைக்கு முயன்று, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள விளக்க குறிப்பில், காவேரிப்பட்டினம் காந்தி நகர் காலணியை சேர்ந்த சிவராமன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, அதே பகுதியை சேர்ந்த சத்யா என்பவரை காதலித்து திருமணம் கொண்டதாகவும், அவருக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளதாகவும் குறிப்பிப்பட்டுள்ளது. மேலும், சிவராமனுக்கு 2 அண்ணன்களும் மற்றும் ஒரு அக்காவும் உள்ளனர். இந்நிலையில் சிவராமன் பல பெண்களிடம் தொடர்பில் உள்ளதை அறிந்த அவரது மனைவி, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சிவராமனை பிரிந்து குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த ஜூலை மாதம் சிவராமன் எலி பேஸ்ட்டை தின்று தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.
அப்போது அவரது உறவினர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்ததோடு, சிகிச்சைக்காக நாம் தமிழர் கட்சி சார்பில் நிதி நிதி திரட்டப்பட்டிருக்கிறது. ஆபத்தான சூழ்நிலையில் இருந்து மீண்டு வந்த சிவராமன், தனியார் பள்ளியில் நடத்திய போலி என்சிசி முகாம் நடத்தி அங்கு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதுமட்டுமின்றி பல மாணவிகளுக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இந்த சம்பவம் வெளியே தெரிந்து காவல்துறையினர் தேடிக்கொண்டிருப்பதை அறிந்த சிவராமன், மீண்டும் 18ம் தேதி எலி பேஸ்ட் பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
இந்நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்ட சிவராமன் தப்பிக்க முயன்ற போது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போது, அவருக்கு உடல் நலம் பாதிக்கப்படவே போலீசாரிடம் தான் எலி மருந்து பேஸ்ட் தின்று தற்கொலைக்கு முயன்றதாக கூறியிருக்கிறார். தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமாகவே சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்சு செல்லபட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், இன்று அதிகாலை 5.30 மணி அளவில் சிவராமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.