பொது இடங்களில் கொட்டப்படும் கட்டிடக்கழிவுகள்.. 3 ரோமிங் குழு அமைப்பு..
சென்னையில் நீர்நிலைகள் மற்றும் பொது இடங்களில் கொட்டப்படும் கட்டிட கழிவுகளை கண்காணிக்க 3 ரோமிங் குழுவை மாநகராட்சி நிர்வாகம் அமைத்துள்ளது.
சென்னையில் நீர்நிலைகள், பொது இடங்களில் கட்டிட கழிவுகளை கொட்டினால் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என ஏற்கனவே சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்து இருந்தது. கட்டிட கழிவுகளை கொட்டுவதால் பொதுமக்களுக்கும், வாகனத் ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுகிறது மழை பெய்யும்போது மழைநீருடன் சேர்ந்து சாலையில் கட்டிடக் கழிவுகள் தேங்கிவிடுகின்றன. மழைநீருடன் கட்டிட கழிவுகள் தேங்கி வடிகால்களில் மழைநீர் வெளியேற இடையூறாக அடைத்துக் கொள்கின்றன. நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் கட்டிட கழிவுகளை கண்டறிந்து அகற்றிட சென்னை மாநகராட்சி மண்டல அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
ஆனால் எச்சரிக்கையையும் மீறி கட்டுமான பணியின்போது அப்புறப்படுத்தும் கட்டிட கழிவுகளை சாலையோரம், நீர்நிலைகளின் கரைகளில் கொட்டிச் செல்வதாக தொடர்ந்து மாநகராட்சிக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் இந்த நடவடிக்கைகளை கண்காணிக்க மூன்று குழுக்களை தற்போது சென்னை மாநகராட்சி நிர்வாகம் அமைத்துள்ளது. இதற்காக புதிதாக 3 ( பொலேரியோ) Bolero வாகனங்களை வாங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி முழுவதும் இந்த குழுக்கள் ஆய்வு மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.