தமிழக அரசியலில் பரபரப்பு : தவெக ஆட்சியை கவிழ்க்க சதி; இதுவரை 6 பேர் கைது..!
தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் கட்சி மாற, மர்ம நபர்கள் சிலர் பேரம் பேசி உள்ளனர். அவர் போலீசில் புகார் அளித்திருந்தார். திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.இதில் பேரம் பேசிய சென்னையை சேர்ந்த யூடியூபர் திருநாவுக்கரசு என்பவர் கைது செய்யப்பட்டார். இவர், லயோலா கல்லுாரி முன்னாள் மாணவர்கள் என்ற பெயரில், தேர்தலுக்கு தேர்தல் கருத்து கணிப்பு வெளியிடுபவர். அவர் அளித்த தகவலின் பேரில் கரூரை சேர்ந்த கார்த்திக், ரமேஷ் ஆகிய 2 பேர் கைதாகினர். இவர்கள் கைது செய்யப்பட்டவர்கள் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்த 6 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். 'திமுகவும், அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க முயன்றதால் அந்த கட்சிகளில் இருந்து பலரும் தவெகவில் இணைய வருகின்றனர். குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இன்னும் முயற்சி செய்கின்றனர்' என அமைச்சர் நிர்மல் குமார் நிருபர்களிடம் குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து சென்னை மாநகர போலீஸ் வெளியிட்ட அறிக்கை:
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் ஆகியோர் கூறியதன் பேரில் தான் யூடியூபர் திருநாவுக்கரசு, ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ.,விடம் கட்சி மாற பேரம் பேசினார். திருநாவுக்கரசு இளையராஜாவிடம், தமிழக சட்டசபையில் சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர உள்ளதாகவும், ஆளுங்கட்சி உறுப்பினராக இருந்தாலும், அத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது தாங்கள் சொல்லும்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும், அதற்கு சன்மானமாக ரூ.35 கோடி வரை தருவதாகவும் ஆசை வார்த்தை காட்டியுள்ளார். அதிர்ச்சி அடைந்த இளையராஜா எனக்கு விருப்பமில்லை, இனிமேல் என்னிடம் பேசாதீர்கள் என்று கண்டிப்புடன் கூறியபோது, தான் பேசியது குறித்து வெளியே தெரிவித்தால் இளையராஜாவும், அவரது குடும்பத்தினரும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று திருநாவுக்கரசு மிரட்டியுள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது ஊழியரான தன்னிடம் தனது மக்கள் பணியை செய்யக் கூடாது என்பதற்காகவும், தனது பேச்சுக்கு உடன்பட லஞ்சம் தர முயற்சித்ததோடு, தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் திருநாவுக்கரசு மற்றும் அவருக்கு பின்புலமாக செயல்படும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

