கடும் அதிருப்தியில் காங்கிரஸ்... தேர்தலில் வேலை செய்ய முடியாது என பரபரப்பு கடிதம்

 
congress

தேர்தலில் வேலை செய்ய முடியாது என காங்.தலைமைக்கு அதிருப்தியில் உள்ள கட்சியினர் கடிதம் எழுதியுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் 27 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியல் நேற்று காங்.தலைமை வெளியிட்டது. இதில், ஏற்கனவே எம்.எல்.ஏ-வாக உள்ள 3 பேருக்கு வாய்ப்பு வழங்காதது, விளவங்கோடு,குளச்சல் & பென்னகரம் தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பெயர் மீதான அதிருப்தி உள்ளிட்ட காரணங்களால் கடுமையான கோபத்தில் காங்.தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர். நமக்கு வேண்டிய வேட்பாளர்கள் யார்? என்பதை முடிவு செய்த பிறகே தொகுதி பங்கீடு நடந்தது என சில மூத்த தலைவர்கள் வெளிப்படையாக குற்றம் சுமத்தும் நிலையில் அதிருப்தியாக இருக்கும் இன்னும் சிலர், காங்.தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், காங்கிரஸ் கட்சிக்காக உழைத்தவர்களுக்கும் , 5 ஆண்டுகளாக தேர்தல் பணி செய்தவர்களுக்கும் சீட் இல்லை என்பது வருத்தமளிக்கிறது. காங்.தலைமையின் இந்த முடிவு நாங்கள் எதிர்பார்த்தது அல்ல எனவும் இது எங்களுக்கு மட்டும் அல்ல காங்கிரஸ் விசுவாசிகள் பலருக்கும் மனவருத்ததை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளனர். மேலும், தேர்தலுக்காக பல வருடமாக உழைத்துள்ள நிலையில் திடீரென புதிய அறிமுகத்தால் தேர்தலில் பணி செய்ய முடியாது என்றும் கூறியுள்ளனர். ஏற்கனவே காங். மாநில தலைமைகள் சிலர் மூத்த நிர்வாகிளுக்கு மதிப்பளிபதில்லை. இப்போது காங்.தலைமையும் அதேபோல் இருப்பதாகவும் கூறியுள்ளனர். 

இந்த கடிதம் எழுதியவர்களிடம் பேசினோம். அடுத்தகட்டமாக என்ன செய்ய போகிறீர்கள்? என கேட்ட போது அதுகுறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. கட்சி மேலிடம் வேட்பாளர்களை மாற்றும் என நம்புகிறோம், இல்லையென்றால் எங்கள் ஆதரவாளர்களோடு ஆலோசித்து அடுத்தகட்ட முடிவு செய்யவோம். இப்போதைக்கு காங்.தலைமை முடிவுக்கு எதிராக தொண்டர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர் என்றனர். மேலும், இடம் கிடைக்காதவர்கள் மட்டுமல்ல 25ல் இருந்து 28 ஆக தொகுதி உயர்ந்த பிறகும் காங்கிரஸ்காக உழைத்த பலருக்கு வாய்ப்பு வழங்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர். பாஜகவில் கூட நேற்று வேட்பாளர் பட்டியல் வெளியான போது அதிலும் மூத்த தலைவர்கள் பலருக்கு வாய்ப்பு இல்லை. ஆனால் அவர்கள் உங்களை போல கட்சிக்கு எதிராக செயல்படவில்லையே? என்ற போது அது அவர்கள் உட்கட்சி விவகாரம், எங்கள் கட்சியில் நடப்பது எங்களுக்கு தான் தெரியும். வேலை செய்யும் நபர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் திடீரென யாரோ ஒருவர் வேட்பாளர் என்றால் இத்தனை ஆண்டுகாலம் உழைத்த எங்களுக்கும், எங்களை சார்ந்தவர்களுக்கும் எப்படி இருக்கும்? தேர்தலில் வேலை செய்வீர்களா? என்ற போது, கட்சி தலைமை முடிவுக்கு நான் கட்டுப்படலாம். ஆனால் எல்லோரும் அப்படி இருப்பார்கள் என சொல்ல முடியாது! ஏற்கனவே "தவெக" உள்ளிட்ட கட்சிகளின் வருகை வாக்கு சதவீதத்தை பாதிக்கும் என சொல்கிறார்கள்! இந்நேரத்தில் கட்சியின் இந்த தவறான முடிவு சங்கடமான சூழலை ஏற்படுத்தும் என்றார். தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட தலைவர்கள் மாற்றம் , தவெக கூட்டணி குழப்பம் உள்ளிட்ட காரணங்கள் காங்கிரஸ் உட்கட்சிக்குள் ஏற்கனவே பிரச்சனையை ஏற்படுத்தியுள்ள நிலையில் வேட்பாளர் அறிவிப்பும் எங்களுக்கு கவலை அளிக்கிறது என முடித்தனர்.