ராகுல்காந்தி, இந்திய கூட்டணி கட்சிகள் எடுத்த உறுதியான முயற்சிக்கு கிடைத்த வெற்றி- செல்வப்பெருந்தகை
வரும் காலங்களில் மக்கள் நலனுக்காக உறுதியாக செயல்பட்டு, ஒரணியில் திரண்டு ஒன்றிய பாஜக அரசு கொண்டு வரும் மக்கள் விரோத மசோதாக்களை எதிர்கொள்வோம் என்ற நம்பிக்கை உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

மக்களவை தொகுதி மறுவரையறையுடன் கூடிய மகளிர் இட ஒதுக்கீடு (33%) மசோதா தோல்வி அடைந்தது. அரசமைப்பு சட்டத்தின் 131இல் திருத்தம் மேற்கொள்ளும் மசோதா நிறைவேற பதிவான 489 வாக்குகளில், 3இல் 2 பங்கான 326 வாக்குகள் தேவை எனும் நிலையில் 278 பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர். இதனால் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா தோல்வியடைந்ததது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 297 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்த போதும் கூட தொகுதி மறு வரையறை மசோதா மீதான வாக்கெடுப்பில் 278 வாக்குகள் என்பது தான் பதிவாகி இருக்கிறது. எனவே பாஜகவின் கூட்டணியில் உள்ள கிட்டத்தட்ட 19 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாஜக எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள். இதனையடுத்து தொகுதி மறு வரையறை மசோதா நிராகரிக்கப்பட்டதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.
இன்று மக்களவையில் நடைபெற்ற தொகுதி மறுவரை மசோதா வாக்கெடுப்பில் தொகுதி மறுவரை மசோதா தோல்வியடைந்தது என்பது ஜனநாயகத்தின் மாண்பை வெளிப்படுத்தும் முக்கிய தருணமாகும். மக்கள் நலனையும், சமச்சீரான பிரதிநிதித்துவத்தையும் காக்கும் நோக்கில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு.ராகுல்காந்தி…
— Selvaperunthagai K (@SPK_TNCC) April 17, 2026
இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள செல்வப்பெருந்தகை, “இன்று மக்களவையில் நடைபெற்ற தொகுதி மறுவரை மசோதா வாக்கெடுப்பில் தொகுதி மறுவரை மசோதா தோல்வியடைந்தது என்பது ஜனநாயகத்தின் மாண்பை வெளிப்படுத்தும் முக்கிய தருணமாகும். மக்கள் நலனையும், சமச்சீரான பிரதிநிதித்துவத்தையும் காக்கும் நோக்கில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு.ராகுல்காந்தி அவர்களும், தி.மு.க. உள்ளிட்ட இந்திய கூட்டணி கட்சிகளும் எடுத்த உறுதியான முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும். தொகுதி மறுவரை மசோதாவை தோல்வியடைய செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பொதுநலனை முன்னிலைப்படுத்தி செயல்படுவது தான் உண்மையான ஜனநாயகப் பொறுப்பு. அந்த வகையில், இந்த வெற்றி தென்னிந்திய மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும். இந்த சாதனையை முன்னெடுத்த அனைத்து இந்திய கூட்டணி கட்சிகளுக்கும் வாழ்த்துகள். வரும் காலங்களில் மக்கள் நலனுக்காக உறுதியாக செயல்பட்டு, ஒரணியில் திரண்டு ஒன்றிய பாஜக அரசு கொண்டு வரும் மக்கள் விரோத மசோதாக்களை எதிர்கொள்வோம் என்ற நம்பிக்கை உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.


