“அமித்ஷாவின் பாதுகாப்பில் வலம் வரும் இபிஎஸ்க்கு ஸ்டாலினை பற்றி பேச அருகதை இல்லை”- செல்வப்பெருந்தகை

 
“காங்கிரசை வைத்து தகராறு செய்யாதீர்கள்... எங்க வேதனையை புரிந்துகொள்ளாதீர்கள்”- செல்வப்பெருந்தகை

எடப்பாடி வகித்த முதலமைச்சர் பதவி சசிகலா போட்ட பிச்சையாகும். இத்தகைய அரசியல் பின்னணி கொண்ட எடப்பாடி பழனிச்சாமி பேச்சை ஒருபோதும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என கமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி அ.தி.மு.க. பங்கேற்கிற தேசிய ஜனநாயக கூட்டணி அமித்ஷாவின் நிர்ப்பந்தத்தால் அமைந்திருக்கிறது. 2021 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்த அ.தி.மு.க., 2024 மக்களவை தேர்தலில் கூட்டணி இல்லாமல் போட்டியிட்டது. அப்போது தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த அண்ணாமலை, எடப்பாடியை பகிரங்கமாக அரசியல் தற்குறி, ஊழல் பேர்வழி என குற்றம் சாட்டி பேசினார். இத்தகைய பின்னணியில் இன்றைக்கு கூட்டணியின் தலைவராக இருக்கிற எடப்பாடி பழனிச்சாமி, தேர்தல் பிரச்சார கூட்டங்களில் ஆத்திரம் பொங்க, தொண்டை கிழிய உரத்த குரலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மீது ஆதாரமற்ற அவதூறு குற்றச்சாட்டுக்களை நாள்தோறும் கூறி வருகிறார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாக கூறியிருக்கிறார்.   2018 மே மாதம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டங்களில் பங்கேற்ற அப்பாவி மக்கள் மீது தமிழ்நாடு காவல்துறை வாகனத்தின் மீது ஏறி நின்று கொண்டு கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்த கொடிய சம்பவம் நடைபெற்றது. இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததே எனக்கு தெரியாது, தொலைக்காட்சியை பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று பகிரங்கமாக பொறுப்பற்ற முறையில் உள்துறையை வகித்த அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதை எவரும் மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள். இதைவிட தமிழ்நாட்டிற்கு ஒரு அவமானம் இருக்க முடியாது. 

மேலும், ஊழலைப் பற்றி எடப்பாடி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதைப் போல இருக்கிறது. தனது உறவினர்களுக்கு ரூபாய் 3500 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை வழங்கியதற்காக அவர்மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு சென்னை உயர்நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு 2018 இல் உத்தரவிட்டது. அதை எதிர்த்து நான்கு ஆண்டுகள் கழித்து 2022 இல் உச்சநீதிமன்றத்திடம் தடையாணை பெறப்பட்டது. அந்த தடையாணையை நீக்குவதற்கு கடந்த 4 ஆண்டுகளாக  மத்திய புலனாய்வுத்துறை முயற்சி செய்யவில்லை. இந்த வழக்கை காட்டித் தான், ஒன்றிய உள்துறைஅமைச்சர் அமித்ஷாவால் மிரட்டப்பட்டு கூட்டணிக்கு எடப்பாடி பணிய வைக்கப்பட்டார். அதேபோல, தேர்தல் பிரமாண பத்திரத்தில் சொத்து மற்றும் படிப்பு குறித்து தவறான தகவல்களை வழங்கியதற்காக அவர்மீது வழக்கு தொடுக்கப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஒன்றிய அரசின் 60 சதவிகித நிதியுதவியில் 11 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி கட்டிடங்கள் தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளுக்கு எதிராக கட்டப்பட்டதால் அதன்மீது சி.பி.ஐ. விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது. இத்தகைய சி.பி.ஐ. விசாரிக்கிற ஊழல் வழக்குகளில் சிக்கி, அமித்ஷாவின் பாதுகாப்பில் வலம் வந்து கொண்டிருக்கிற எடப்பாடி பழனிச்சாமி, அரசியல் பேராண்மையோடு பா.ஜ.க.வை எதிர்த்து வருகிற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களைப் பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது ?  தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை, பாலியல் குற்ற வழக்குகள் அதிகரித்து விட்டது என அபாண்டமாக குறை கூறுகிறார். ஆனால், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் வேலைக்கு செல்வதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது. பெண்களுக்கு எதிராக எந்த குற்றம் நிகழ்ந்தாலும் உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுத்து தண்டனை பெற்றுத் தருவதில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு இருப்பதை தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளி விவரங்கள் உறுதி செய்கின்றன. எடப்பாடி ஆட்சியில், ஜீரணிக்க முடியாத பெரும் குற்றமாக பொள்ளாச்சியில் பாலியல் குற்றம் நிகழ்ந்தது. பெண்களை ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுத்து பணம் மற்றும் பாலியல் ரீதியாக மிரட்டி வந்த நிலையில், அந்த குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு கொடுத்த ஆட்சி தான் எடப்பாடியின் அ.தி.மு.க. ஆட்சியாகும். மேலும், சென்னையில் 5 வயது சிறுமி கடத்தப்பட்டதும், கோயம்புத்தூரில் பள்ளி மாணவி கடத்தப்பட்டு கொல்லப்பட்டது உள்ளிட்ட கடத்தல் மற்றும் கொலை வழக்குகள் நிகழ்ந்து மாநிலத்தையே கொந்தளிக்க வைத்ததை எடப்பாடியால் மூடி மறைக்க முடியாது. கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு 2018 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தமிழகத்தையே உலுக்கிய ஒரு முக்கிய பாலியல் வழக்காகும். இந்தப் பின்னணியில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென்று எடப்பாடி கூறுவது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யாகும். 

தமிழ்நாட்டில் 2013 இல் குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், அமைச்சர்கள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்பட்டு சட்ட விரோதமாக குட்கா விற்பனை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் எழுந்தன. இந்த வழக்கில் நவம்பர் 2023 இல் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர் மற்றும் பி.வி. ரமணா ஆகியோரை விசாரிக்க தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அனுமதி அளித்தார். இவ்வழக்கில் சி. விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரன் உள்ளிட்டோர் வீடுகளில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஒரு குட்கா வியாபாரியின் டைரியில், அமைச்சர் ஒருவருடன் நடத்தப்பட்ட பேரங்களின் விவரங்கள் கைப்பற்றப்பட்டது குறித்து பரபரப்பாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், இந்த வழக்கை தற்போது சி.ஐ.பி. மற்றும் அமலாக்கத்துறை ஆகியவை ஜவ்வு போல இழுத்து விசாரித்து வருவது அரசியல் பேர சந்தேகங்களை உறுதி செய்கிறது. இந்த வழக்கை விரைவாக விசாரித்து குற்றவாளிகளை தண்டிப்பதில் ஏற்படுகிற காலதாமதத்திற்கு எடப்பாடி, அமித்ஷா பேரம் தான் காரணம் என்பதை மறுக்க முடியுமா ? முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு சட்டப்பேரவையில், அப்போது முதலமைச்சராக இருந்த ஒ. பன்னீர்செல்வம், அன்று எதிர்கட்சித் தலைவராக இருந்த மு.க. ஸ்டாலின் அவர்களைப் பார்த்து சிரித்ததற்காக சசிகலாவினால் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அந்த வாய்ப்பை பயன்படுத்தி சசிகலாவின் காலில் விழுந்து அவரது தயவில் முதலமைச்சரானவர் தான் எடப்பாடி பழனிச்சாமி. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களைப் போல மக்கள் வாக்குகளை பெற்று ஆட்சியில் அமர்ந்தவரல்ல. எடப்பாடி வகித்த முதலமைச்சர் பதவி சசிகலா போட்ட பிச்சையாகும். இத்தகைய அரசியல் பின்னணி கொண்ட எடப்பாடி பழனிச்சாமி பேச்சை ஒருபோதும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 

எனவே, தி.மு.க. தலைமையிலான, காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தமிழ்நாட்டு நலன் சார்ந்து செயல்பட்டு வருகிறது. 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கொடுத்த 505 வாக்குறுதிகளில் 405 நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதால் தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களும் பயனடைந்து மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய வாழ்வாதாரம் உயர்ந்திருக்கிறது. இந்தியாவிலேயே மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்து இரண்டாவது மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து சாதனைகளை படைத்து வருகிறது. இத்தகைய சாதனைகளை படைத்து தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மீண்டும் நல்லாட்சி அமைவதை ஆயிரம் அமித்ஷா, எடப்பாடிகள் ஒன்று சேர்ந்து எத்தகைய கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் தடுக்க முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.