“தமிழ்நாட்டு மண் பிஜேபிக்கான மண் இல்லை”- செல்வப்பெருந்தகை
தமிழ்நாடு காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் துறை மாநில செயற்குழு கூட்டம்,சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. எஸ். ராஜேஷ்குமார், அகில இந்திய காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் துறை தலைவர் டாக்டர் அணில் ஜெய்ஹிந்த், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் திரு. கிரிஷ்சோடங்கர், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் திரு. சூரஜ் எம்.என். ஹெக்டே, திரு. நிவேதித் ஆல்வா, திரு. ஜிதேந்திர பகேல் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, “மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வந்தாலும் தமிழ்நாட்டு மண் பிஜேபிக்கான மண் இல்லை. தமிழ்நாட்டு மக்கள் பிஜேபிக்கு ஒருபோதும் தமிழ் மண்ணில் இடம் அளிக்க மாட்டார்கள். காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர்கள் பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுனா கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இடம் தேர்வு செய்த பின்பு அதற்கான இடம் அறிவிக்கப்படும். தவெக தலைவர் விஜய் திமுக ஓட்டைத் தான் பிரிப்பார் என லயோலோ கல்லூரி கருத்து கணிப்பு கூறுகிறது. இப்படி கருத்துக்கணிப்பு இருந்தாலும் இந்தியா கூட்டணி முன்னணியில் இருக்கும். திமுக- காங்கிரஸ் கூட்டணி நீண்ட நாட்களாக நீடித்து வலுவாக உள்ளது. சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் ஆட்சியில் பங்கு போன்றவை கூட்டணி பேச்சுவார்த்தையில் கேட்டு பெற வேண்டும். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல அனைத்து காங்கிரஸ் தொண்டர்களின் விருப்பம்” என்றார்.


