இன்னும் 2 நாட்கள் மழை பெய்தால் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்ப வாய்ப்பு- செல்வப்பெருந்தகை
ஃபெஞ்சல் புயலில் தமிழ்நாடு அரசு திறம்பட செயல்பட்டுள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

திமுக முன்னாள் எம்.எல்.ஏ கோதண்டம் படத்திறப்பு நிகழ்ச்சி குன்றத்தூரில் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி.டி.ஆர்.பாலு,அமைச்சர் தா.மோ.அன்பரசன் ,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை ஆகியோர் கலந்து கொண்டு மறைந்த கோதண்டம் புகைப்படத்தை திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை, “ஃபெஞ்சல் புயல் ஒரு வித்தியாசமான புயல். இந்த புயலில் தமிழக அரசு திறம்பட செயல்படுகிறது. தமிழக முதல்வர் செம்மையாகவும், திறமையாகவும் அரசு இயந்திரத்தை இயக்கி உள்ளார். தமிழக அரசிற்கு எனது வாழ்த்துகள். 99 சதவீதம் நிறைவாக மக்கள் பணி செய்தாலும் 1 சதவீதத்தில் முக சுளிப்பு ஏற்படும். அதனையும் சரியாக செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். செம்பரம்பாக்கம் ஏரியால் எந்த அச்சமும் தேவையில்லை. தற்போது பாதுகாப்பான நிலையில் உள்ளது. இன்னும் இரண்டொரு நாள் மழை பெய்தால் ஏரி நிரம்ப வாய்ப்புள்ளது” என்றார்.


