“மாணிக்கம்தாகூர் மிரட்டல்களுக்கு பயந்தவர் அல்ல; திருப்பி அடிக்க தெரிந்தவர்”- திமுகவுக்கு காங்கிரஸ் பதிலடி

 
மாணிக்கம்தாகூர்

உதயநிதி தி.மு.க.வின் தரம் தாழ்ந்த அரசியலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பதில் அளித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், “SIR குறித்த கேள்விகளுக்கு உண்மைகளால் பதிலளிக்க முடியாதபோது, எங்கள் தலைவர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களைத் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்துவதும், “வாயை அடக்க வேண்டும்; இல்லையென்றால் அடக்கப்படும்” என்று வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசுவது ஏன்? இந்தப் பேச்சுக்கெல்லாம் அஞ்சுபவர்களா காங்கிரஸ்காரர்கள்? அரசியல் விவாதத்தை இவ்வளவு தரம் தாழ்ந்த நிலைக்குக் கொண்டுசெல்ல வேண்டிய அவசியம் என்ன? முதலில், SIR குறித்த காங்கிரஸின் நிலைப்பாட்டைப் புரிந்துகொள்ளுங்கள்! எங்கெல்லாம் தேர்தல் முறைகேடுகள் குறித்த உறுதியான, தீர்மானகரமான ஆதாரங்கள் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் அவற்றின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; தேவைப்பட்டால் மறுதேர்தலும் நடத்தப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களின் சூழல்களையும், பீகார், மேற்கு வங்கம், அசாம் போன்ற மாநிலங்களில் எழுந்துள்ள குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளையும் ஆதாரங்களை ஆராயாமல் ஒன்றாகச் சேர்த்துப் பேசுவது சரியான அணுகுமுறை அல்ல. ஆதாரங்கள் எங்கே இருக்கின்றனவோ, நடவடிக்கையும் அங்கே இருக்க வேண்டும். ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை உண்மையாகச் சித்தரிக்கக் கூடாது.

அப்படியானால், தி.மு.க.வுக்கு ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு? SIR நடவடிக்கையின்போது தி.மு.க. தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று மக்களுக்கு உதவியதையும், வாக்குகளைப் பாதுகாக்கக் களத்தில் பணியாற்றியதையும் திமுக தலைவர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் பாராட்டினார். அந்தப் பணியை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. தொண்டர்களின் உழைப்பு பாராட்டப்பட வேண்டியதே! ஆனால், அதே நேரத்தில், அந்தப் பணியைச் சுட்டிக்காட்டி SIR தொடர்பான மோசடிகள் எதுவும் தமிழ்நாட்டில் நடைபெறாமல் திமுக தடுத்துவிட்டதாகக் கூறினார். அன்று தொண்டர்களின் உழைப்பைப் பாராட்டியபோது SIR குறித்து ஒரு நிலைப்பாடு; இன்று கேள்வி எழுப்பப்படும்போது வேறொரு நிலைப்பாடா? இதைத் தெளிவுபடுத்த வேண்டியது தி.மு.க.வின் பொறுப்பு. இந்தக் கேள்வியைக் கேட்டதற்காக ஏன் இவ்வளவு கோபம்? ஏன் இவ்வளவு ஆபாசமான தனிநபர் தாக்குதல்கள்? ஏன் வன்முறைப் பேச்சு?இந்த மிரட்டல்களுக்கு பயந்தவர் அல்ல எங்கள் தலைவர் மாணிக்கம் தாகூர் அவர்கள்.திருப்பி அடிக்க தெரிந்தவர்.

கருத்துக்குக் கருத்தால் பதிலளியுங்கள்; உண்மைக்குப் பொய்யால் பதிலளிக்காதீர்கள்!காங்கிரஸ் தலைவர்களின் கருத்துகளுடன் உடன்படவில்லை என்றால், ஆதாரங்களை முன்வைத்து விவாதியுங்கள். ஆனால், அரசியல் விமர்சனத்தைத் தனிப்பட்ட அவதூறாக மாற்றுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசியல் விவாதத்தைத் தொடர்ந்து இத்தகைய தரம் தாழ்ந்த மொழிக்குக் கொண்டுசெல்வது தமிழ்நாட்டின் அரசியல் பண்பாட்டுக்கு நல்லதல்ல. தமிழக காங்கிரஸ் யாருக்கும் அடிமையல்ல.எங்கள் தலைவர் மாணிக்கம் தாகூர் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டுமே தவிர, அவரை மிரட்டலாம் என்று கற்பனை செய்வது மூலமாகவோ, இழிவுபடுத்துவதன் மூலமாகவோ உண்மையின் குரலை அடக்கிவிட முடியாது. ஜனநாயகத்தைக் காப்பது எங்கள் கடமை. ஒவ்வொரு தகுதியான குடிமகனின் வாக்குரிமையைப் பாதுகாப்பது எங்கள் உறுதியான நிலைப்பாடு. உண்மைகளைப் பேசுவதற்கும் கேள்வி கேட்பதற்கும் காங்கிரஸ் ஒருபோதும் அஞ்சாது. தி.மு.க.வுக்கு மீண்டும் கேட்கிறோம்: உண்மைகளை எதிர்கொள்ளத் தயாரா? அல்லது கேள்வி கேட்பவர்களை தனிநபர் தாக்குதல் மற்றும் ஆபாசப் பேச்சின் மூலமாக மௌனமாக்க முடியும் என்று நினைப்பது தான் உங்கள் அரசியலா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.