ஆளுநர் மாளிகை முற்றுகை - காங்., கட்சியினர் கைது
சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். குறிப்பாக சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
அமெரிக்கா நீதிமன்றத்தால் குற்றம்சாட்டப்பட்டுள்ள அதானியின் ஊழல் மோசடிகள் குறித்தும் மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பிரதமர் நேரில் சென்று சந்திக்காதது குறித்தும் நாடாளுமன்றத்தில் அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்தும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அறுவுறுத்தலின் படி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டமானது தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர். ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்து இருந்தது.
இதனை தொடர்ந்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்து வாகனத்தில் ஏற்றி அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை காவல்துறையினர் வைத்துள்ளனர்.