"அமைச்சர் பதவிக்கு ரூ. 100 கோடி பேரம்"- நாராயணசாமி பரபரப்பு குற்றச்சாட்டு‌

 
Narayanasamy

புதுச்சேரியில் அமைச்சர் பதவிக்கு ரூ. 100 கோடி பேரம்‌ நடப்பதாகவும், அமைச்சர் நியமனத்தில் தாமதமாதவற்கு காரணம் என்ன என்று முதல்வர் ரங்கசாமி அறிக்கை வெளியிடவேண்டும் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். 

புதுச்சேரி முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், “நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடன் அமைச்சர் பதவியிலிருந்து தூக்கி எறியப்படவேண்டும். புதுச்சேரியில் இரு மொழிக்கொள்கையும், பிரெஞ்சும் தொடர வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுத வேண்டும். முதல் அமைச்சர் பதவியேற்பில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படும். தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் மோடியின் ஏஜென்டுகள் ஆளுநராக இருப்பதால் வந்தே மாதரம், தேசியக்கீதத்துக்கு பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுகிறது. இது புதுச்சேரி மக்களுக்கு என்டிஏ அரசு செய்யும் துரோகம்.முதல் அமைச்சர் ரங்கசாமிக்கு நாற்காலி மட்டும் தேவை. பாஜக சொல்வதற்கு தலையாட்டி பொம்மையாக ஐந்தாண்டுகள் இருப்பார். புதுச்சேரி மக்கள் தலைவிதி. வாக்களித்தோர் சிந்தித்து வாக்களித்து இருக்கவேண்டும். ஐந்தாண்டுகள் புதுச்சேரியில் வேலைவாய்ப்பு இருக்காது. தொழிற்சாலைகள் வராது. அரைத்த மாவையே அரைப்பார்கள்.

புதுச்சேரியில் முதல் அமைச்சர், இரு அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். இன்னும் மூன்று அமைச்சர், சபாநாயகர், துணைசபாநாயகர் பதவியேற்கவேண்டும். இதில் இழுபறி நீடிக்கிறது. பொது வெளியில் அமைச்சர் பதவிக்கு பேரம் பேசப்படுவதாக தகவல்கள் வருகின்றன. ஒரு அமைச்சர் பதவிக்கு ரூ. 100 கோடி பேரம் பேசப்படுகிறது. அமைச்சரவை அமைக்கும் முன்பாகவே ஊழல் இருந்தால் இந்த ஆட்சி எப்படி இருக்கும். இதனால்தான் அமைச்சர்கள் பதவியேற்பு தள்ளிபோகிறது. அமித்ஷா சொல்வதை முதல் அமைச்சர் கேட்காவிட்டால் நாற்காலிக்கு ஆபத்து. அமைச்சர் நியமனத்தில் தாமதமாதவற்கு காரணம் என்ன என்று முதல்வர் ரங்கசாமி அறிக்கை வெளியிடவேண்டும். தமிழக முதல்வர் விஜய்க்கு நண்பர் ரங்கசாமி. விஜய் பதவியேற்பில் ஊழல் செய்யமாட்டேன் என்று பகிரங்கமாக பதவியேற்பில் தெரிவித்தார். அதேபோல்  விஜய்க்கு நெருக்கமான ரங்கசாமியும் விஜய் பாணியில் செயல்படுவாரா- ஆரம்பமே கோணலாக அமைச்சர் பதவிக்கு ஏலம் போகிறது. தற்போது ரூ. 50 கோடியில் இருந்து ரூ. 100 கோடியாகி இன்னும் தாமதமானால் ரூ. 150 கோடியாகும். நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை தேவை. துறைகளில் ஊழல் ஒழித்து மக்கள் நல்வாழ்த்து ஆட்சியை தந்தால் பாராட்டுவோம். ஊழல் இருந்தால் ஆறு மாதங்களுக்கு பிறகு வெளியிடுவோம். அமைச்சர்கள் நியமனத்தில் காலதாமதம் ஏன் என்பதை முதல்வர் பதில் சொல்ல வேண்டும். புதுச்சேரிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் புதுச்சேரியில் அமைச்சராக கனவு காண்கின்றனர். பணத்தை வாரி இறைத்து தேர்தலில் வென்று, அமைச்சராகிவிடவேண்டும் என டெல்லிக்கும் புதுச்சேரிக்கும் காவடி தூக்குகிறார்.  தற்போது போதை மாநிலமாக இருக்கும் புதுச்சேரி சூதாட்டமாநிலமாக மாறிவிடும் சூழல் உள்ளது” என்றார்.


தமிழகம் போல் புதுச்சேரியில் தவெக கூட்டணியா என்று கேட்டதற்கு, புதுச்சேரியில் காங்கிரஸ் வழிகாட்டுதல் குழு அமர்ந்து பேசுவோம். இதுபற்றி பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கரை சந்தித்துள்ளோம். அதன்பிறகு முடிவு எடுப்போம். தனிப்பட்ட நிலைப்பாடு எங்களுக்கு கிடையாது. கட்சி அகில இந்திய தலைமை முடிவு செய்யும். தமிழகத்தில் விஜய்க்கு ஆதரவு தந்துள்ளோம். பதவியேற்பில் ராகுல் பங்கேற்றார். காங்கிரஸுக்கும் தவெகவுக்கும் நல்ல நட்புறவு உண்டாகியுள்ளது. இதுபற்றி புதுச்சேரியில் குழுவும், கட்சியினர் கருத்து கேட்டு முடிவு எடுப்போம் என்றார்.