பார் திறக்க முதலமைச்சர் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்குகிறார்- நாராயணசாமி குற்றச்சாட்டு
புதுச்சேரியில் ரெஸ்டோ பார் திறக்க முதலமைச்சர் ரங்கசாமி ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்குகிறார் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “மோடி அரசு திட்டமிட்டு எதிர்க்கட்சி தலைவர்களை பழிவாங்குகிறது. எதிர்க்கட்சி தலைவர்கள் மீது பொய் வழக்கு போடுவதும், சிபிஐ, வருமான வரித்துறையை வைத்து ரெய்டு நடத்தி மிரட்டுவதும் வேலையாக வைத்துள்ளது. டெல்லியின் ஆம்ஆத்மி கட்சி அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போட்டுள்ளது. இதே போல் காங்கிரஸ் கட்சி ராஜஸ்தான் முதலமைச்சர் மகன் மீது அமலாக்கத்துறை சோதனை செய்கிறது.
ஒட்டுமொத்தமாக மோடி அரசு இயந்திரங்களை முடுக்கிவிட்டு பொய் வழக்கு போட்டுள்ளது. தற்போது அரவிந்த்கெஜ்ராவலுக்கு அமலாக்கத்துறை அழைப்பு விடுத்துள்ளது. வியாரபம் ஊழலில் சிக்கி இருந்த மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. அசாம் மாநில முதலமைச்சர் மீது சிபிஐ வழக்கு பதிந்து விசாரணை நடத்தியது. அவர் பாஜகவில் இணைந்த உடன் அந்த வழக்கை மூடி மறைத்துள்ளது. இந்தியா கூட்டணி வெற்றி பெற்ற பிறகு ஊழல் பட்டியல் வெளியிடப்பட்டு அதானி முதல் புதுச்சேரி பாஜக அமைச்சர்கள் வெளிநாட்டில் பணம் பதுக்கி வைத்ததை வெளி கொண்டு வந்து நடவடிக்கை எடுப்போம்.
தமிழகத்தில் ஆர்.என்.ரவியின் வேலைகள் எடுபடாது. தமிழக மக்கள் தெளிவானவர்கள். தமிழகத்தின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளது. வளர்ச்சிக்கு முட்டுகட்டை போடுகிறார். இது பாஜகவுக்குதன் பின்னடைவை ஏற்படுத்தும். திமுகவையோ, எங்களது இந்தியா கூட்டணியையோ பாதிக்காது. மோடி ஜனநாயக முறைப்படி செயல்படுவதாக இருந்தால், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும்.புதுச்சேரி ராஜ்பவனை பாஜக அலுவலகமாக மாற்றிய, பெருமை தமிழிசை சேரும். இவர் அரசியல் செய்கிறார். இவர் ஆளுநராக இருக்க தகுதியற்றவர். அமைதியான புதுச்சேரி மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் புகுந்து அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது. கலவரத்தை உருவாக்க இது போன்ற ஊர்வலத்தை நடத்துகின்றனர்.
புதுச்சேரியில் ரெஸ்டோ பார் திறக்க முதலமைச்சர் ரங்கசாமி ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்குகிறார் என பகீரங்கமாக கூறுகிறேன். பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் 13% கமிஷன் வாங்குகிறார். நான் பொய் கூறுகிறேன் என்றால் என்மீது வேண்டுமானால் வழக்கு தொடரட்டும்” என்றார்.