பட்ஜெட்டில் கேரள மாநிலம் முழுவதுமாக விடுபட்டு போயிருக்கிறது - காங்கிரஸ் எம்.பி.சசிதரூர்..!

 
1 1

திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகளில் கேரளா முழுமையாக விடுபட்டு போயிருக்கிறது என்று விமர்சித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;

விழிஞ்சம் தேசிய சொத்து. நாட்டின் கடல்சார் வர்த்தகத்தின் நுழைவாயில். ஆனால் அதற்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு என்பது பூஜ்ஜியமே. இதே தேச முன்னுரிமையாக கருதாமல், கேரளாவின் பிரச்னையாக கருதினால் அது தவறு.

நமது கடலோர நிலப்பரப்புகள் அரிக்கப்பட்டு வருகின்றன. இந்த பிரச்னை எல்லையில் நிகழ்ந்து இருந்தால், அது ஒரு பாதுகாப்பு அவசர நிலையாக கருதப்பட்டு இருக்கும். கடலோர சமூகத்தை மத்திய அரசு மாற்றாந்தாய் போக்குடன் நடத்துவது தொடர்கிறது.

3 புதிய தேசிய மருந்து மற்றும் கல்வி ஆராய்ச்சி மையங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தாலும், அவை எங்கே அமைய இருக்கின்றன என்ற தெளிவான இடங்கள் குறிப்பிடப்படவில்லை. வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் பல தேசிய மருந்து மற்றும் கல்வி ஆராய்ச்சி மையங்கள் இருக்கின்றன.

தென்னிந்தியாவில் ஹைதராபாதில் மட்டும் ஒரேயொரு ஆராய்ச்சி மையம் உள்ளது. கேரளாவில் வலுவான சுகாதார பாதுகாப்பு இருந்த போதிலும், தேசிய மருந்து மற்றும் கல்வி ஆராய்ச்சி மையங்களை மறுப்பது பிராந்திய ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும்.

ஏற்கனவே ரசாயன மற்றும் உரங்களுக்கான நிலைக்குழு உறுப்பினராக இருக்கும் போதே, 2 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த பிரச்னையை எழுப்பி இருக்கிறேன். கேரளாவின் திருவனந்தபுரம் எம்.பி.என்ற முறையில் மத்திய பட்ஜெட்டில் கேரளா விடுபட்டு போயிருக்கிறது.

நமது வலியை பொருட்படுத்தாத ஒரு மத்திய அரசுக்கும், சொந்த நிதியை தவறாக பயன்படுத்தும் ஒரு மாநிலத்திற்கும் இடையில் கேரள மக்கள் துரதிருஷ்டவசமாக சிக்கிக் கொண்டு உள்ளனர். நம்மை மதிக்கும் ஒரு மாற்று அரசு டில்லிக்கு தேவை. அதேபோல, வளர்ச்சியை வழங்கும் ஒரு மாற்று கேரளாவுக்கு தேவை. ஆனால், ,இவை இரண்டும் தற்போது நம்மிடம் இல்லை.

இவ்வாறு சசிதரூர் கூறி உள்ளார்.