"இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு த.வெ.க பணப்பட்டுவாடா..?"- மாணிக்கம் தாகூர்

 
"இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு த.வெ.க பணப்பட்டுவாடா..?"- மாணிக்கம் தாகூர்

முதல்வர் விஜய் பாஜகவுக்கு எதிரானவரா? பாஜகவை துணிச்சலுடன் எதிர்ப்பவர் முதல்வர் விஜய் என காங்கிரஸ் எம்பி மாணிக்கம்தாகூர் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி மாணிக்கம்தாகூர், “தேர்தலுக்கு முன் நடந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் ராகுல் காந்தி நாங்கள் விவரித்த நியாயங்களைக் கேட்டறிந்தார். ‘இந்த திமுக கூட்டணி தோற்றுவிடும். ஏனென்றால் அவர்களுக்கு மிகப்பெரிய Anti-incumbancy இருக்கிறது. திமுகவுடைய ஊழலை மக்கள் வெறுக்கிறார்கள். இந்த கூட்டணியில் நாமும் இருந்து தோற்கணும் என்றால்  தோற்கலாம். அதற்கு பதிலாக தவெகவுடன் கூட்டணி அமைத்தால் பலமாக இருக்கும். பெரிய வெற்றி கிடைக்கும்’ என்று நான் சொன்ன கருத்தை கேட்டுக்கொண்டார். அதன் தொடர்ச்சியாக, மே 5-ஆம் தேதியே த.வெ.கவுடன் செல்வதற்கான முடிவை எடுத்தோம். அப்போதே எங்கள் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்கள் இதை டி.ஆர்.பாலுவிடம் தெரிவித்துவிட்டார். தோல்வி பயத்தில் கதை கட்டி விடுவதை எல்லாம் நம்ப வேண்டாம்.. த.வெ.க பணம் கொடுக்காமல் தேர்தலை சந்திக்கிறது.. மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. தவெக அரசு மீது  கோபமா என்பது தேர்தல்  முடிவில் தெரிந்து விடும். முதலமைச்சர் விஜய்யின் நேர்மையான அரசியலுக்கு தமிழக மக்களுடைய ஆதரவு முழுமையாக இருக்கும். பணம் கொடுத்து வெற்றிபெறும் அதிமுக, திமுகவின் ஃபார்முலாவை தவெக தகர்த்தெரியும்.

கடந்த 2025-ஆம் ஆண்டு நடைபெற்ற கரூர் சம்பவத்திற்குப் பிறகு, செப்டம்பர் 29-ஆம் தேதி ராகுல் காந்தி அவர்கள் விஜய்யிடம் தொலைபேசியில் பேசினார். இத்துயரச் சம்பவத்திற்குப் பின் விஜய்யிடம் முதன்முதலாகப் பேசிய அரசியல் தலைவர் ராகுல் காந்திதான். அப்போது அவர், ‘நான் என் தந்தையை இழந்துள்ளேன். நீங்கள் யாரை மிகவும் நேசிக்கிறீர்களோ, அவர்கள்  உங்கள் கண் முன்னால் உயிரிழக்கும்போது ஏற்படும் வலி எனக்கு நன்றாகப் புரிகிறது. உங்களுக்கு நடந்த துயரம் என்பது ஒரு மிகப்பெரிய பேரிழப்பு. இதில் நீங்கள் உடைந்து போயிருக்கலாம்; ஆனால், இதிலிருந்து மீண்டு வர வேண்டும். உங்களை நம்பியிருக்கும் மக்களுக்காக எப்போதும் அவர்களுடன் துணை நிற்க வேண்டும்’ என்று விஜய்யிடம் கூறினார்”