“ஈவிகேஎஸ் பேச்சு வேடிக்கையாக உள்ளது”- கார்த்தி சிதம்பரம்

 
கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸ் கட்சிக்கு கார்த்தி சிதம்பரம் துரோகம் செய்வதாக ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு காங்கிரஸ் பேசிய நிலையில், கட்சியில் இருந்து என்னை நீக்க சொல்வது வேடிக்கையாக உள்ளது என எம்.பி., கார்த்தி சிதம்பரம் பதில் அளித்துள்ளார்.


தேர்தலில் கூட்டணி வைத்துள்ளோம் என்ற ஒரே காரணத்தால், தேர்தல் இல்லாத காலத்தில் மக்களின் பிரச்னைகளை பேசாத காரணத்தினால்தான், மக்கள் புதிதாக வரும் கட்சிகளை நோக்கி நகர்கிறார்கள் என அண்மையில் கார்த்தி சிதம்பரம் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், கள்ளக்குறிச்சி விவகாரம் , என்கவுண்டர் விவகாரம் குறித்து, திமுக அரசுக்கு எதிராக கார்த்தி சிதம்பரம் பேசினார். இதற்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன், திமுக இல்லையெனில் கார்த்தி சிதம்பரம் டெபாசிட் கூட பெற்றிருக்க முடியாது. காங்கிரஸ் யாரையும் சார்ந்திருக்கக்கூடாது என தேர்தலுக்கு முன் கார்த்தி சிதம்பரம் கூறியிருக்கலாமே என கடுமையாக விமர்சித்து இருந்தார்.

இதனால் உட்கட்சி மோதல் வெடித்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், “நான் என்ன பேசினேன் என்பதை இளங்கோவன் கேட்டாரா என்பதே சந்தேகமாக உள்ளது. கட்சி வளர வேண்டும் என நான் சொன்னதை நாட்டுக்கு கேடு என்கிறார். அவரை விமர்சனம் செய்ய நான் தயாராக இல்லை. நான் பேசியது சரியா, தவறா என்பதை தொண்டர்களிடம் கேளுங்கள். ஈவிகேஎஸ் இளங்கோவன் கட்சியில் இருந்து என்னை நீக்க சொல்வது வேடிக்கையாக உள்ளது.  தனது நீண்ட அரசியல் பயணத்தில் இளங்கோவன் பல ஏற்றத் தாழ்வுகளை பார்த்திருப்பார். ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்திற்கு நான் எதிர்கருத்து தெரிவிக்க விரும்பவில்லை” என்றார்.