அண்ணாமலையின் பாதயாத்திரை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது- கார்த்திக் சிதம்பரம்

 
karti chidambaram

சந்திராயன் 3 நிலவில் வெற்றிகரமாக இறங்கும், நமது விஞ்ஞானிகளின் வெற்றி பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

 கார்த்தி சிதம்பரம்

சிவகங்கை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் இராமநாதபுரத்தில் கட்சி நிர்வாகி இல்ல வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “ இன்று ஒரு முக்கியமான நாள், இந்தியர்கள் அனைவரும் பெருமைப்படக்கூடிய நாள். சந்திராயன் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கும் என நம்புகிறேன். நம்முடைய விஞ்ஞானிகள் குறிப்பாக இஸ்ரோ விஞ்ஞானிகள் பெருமைக்குரியவர்கள், அவர்களுடைய வெற்றி தங்கத்தில் பொறிக்கப்பட வேண்டிய வெற்றியாகும்.

நீட் தேர்வை தமிழகம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. மற்ற மாநில முதல்வர்களோடு சேர்ந்து அவர்களுக்கு கடிதம் எழுதி அவர்களோடு சேர்ந்து நீட்டுக்கு எதிராக அழுத்தம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நீட்டுக்கு விலக்கு பெற முடியும். இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது, தமிழகத்தை பொறுத்தவரை திமுக காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் அனைத்துமே வலுவான நிலையில் உள்ளது. வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை பொருத்தவரை என்னுடைய விருப்பத்தை தலைமையிடம் சொல்லி இருக்கிறேன். 

தமிழகத்தில் அண்ணாமலைக்கு ஒரு பூதக்கண்ணாடியையும் மெகா போனையும் அவர் கையில் கொடுத்திருப்பதால், அவர் சொல்வதெல்லாம் பெரிதாக தெரிகிறது. மற்றபடி தமிழகத்தில் இந்துத்துவா வெற்றி பெற வாய்ப்பே இல்லை. இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். 2024 தேர்தலிலும் பாஜக தமிழகத்தில் நிராகரிக்கப்படுவது உறுதி, அண்ணாமலையின் பாதயாத்திரை தமிழகத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது” என கூறினார்