தெருநாய் கடி பாதிப்புகளை கட்டுப்படுத்த மோடியிடம் கார்த்தி சிதம்பரம் கோரிக்கை

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்தித்த காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், இந்தியாவில் தெரு நாய்களால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை மனு அளித்தார்.
இதுதொடர்பாக கார்த்தி சிதம்பரம் எம்பி தனது எக்ஸ் தளத்தில், “இன்று பிரதமரை அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து, தெருநாய்களால் அதிகரித்து வரும் உடல்நலம் பாதிப்பு மற்றும் பாதுகாப்பு கவலைகளை அவரது கவனத்திற்குக் கொண்டு வந்தேன். உலகளவில் மிகப்பெரிய தெருநாய் மக்கள்தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இங்கு 6.2 கோடிக்கும் அதிகமான தெருநாய்கள் உள்ளன. உலகில் பரவும் ரேபிஸ் தொடர்பான இறப்புகளில் 36% இந்தியாவில் பதிவாகியுள்ளது. விலங்கு பிறப்பு கட்டுப்பாடு (ABC) விதிகள், 2023 அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், செயல்படுத்தல் பயனற்றதாக உள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடியிடம் கவலை தெரிவித்தேன்.
Met the Hon'ble Prime Minister today in his Parliament House office to bring to his notice the growing health & safety concerns posed by stray dogs. India is home to one of the largest stray dog populations globally, with over 6.2 crore stray dogs.
— Karti P Chidambaram (@KartiPC) March 28, 2025
India is also endemic for… pic.twitter.com/zbvZ7avjPT
தெருநாய் கடி சவாலை எதிர்கொள்ள ஒரு நீண்ட கால திட்டம் வகுக்க வேண்டும். உள்ளூர் அமைப்புகளுக்கு இந்த சிக்கலை திறம்பட கையாள போதுமான நிதி மற்றும் தொழில்நுட்பம் இல்லை. அவசர நடவடிக்கை தேவை என்பதால் அவர்களுக்கு தீர்வை வழங்கும் விதமாக ஒரு குழுவை நிறுவ பரிந்துரைத்தேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.