“இவ்வளவு கொடூரமான குற்றம் செய்த ஒருவர் இத்தனை ஆண்டுகாலம் தப்பித்திருக்கிறார்”- ஜோதிமணி

 
புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு; ஜோதிமணி எம்.பியின் கேள்வியும் மத்திய அரசின் பதிலும்

ஜெம் கிரானைட்ஸ் வீரமணி சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்தது தொடர்பான விசாரணையில் தெரியவரும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கூறியுள்ளார்.

இதுகுறித்து ஜோதிமணி தனது எக்ஸ் தளத்தில், “ஜெம் கிரானைட்ஸ் வீரமணி சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்தது தொடர்பான விசாரணையில் தெரியவரும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.  சமூகத்தில் தனக்குள்ள அந்தஸ்து மற்றும் செல்வாக்கைப் பயன்படுத்தி இவ்வளவு கொடூரமான குற்றத்தில் இருந்து ஒருவர்  இத்தனை ஆண்டுகாலம் தப்பித்திருக்கிறார் என்பது சாதாரணமாக கடந்து போய்விடக் கூடிய விசயமல்ல.  ஒரு சிறுமியின் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமை என்பது ஒரு தனிநபருக்கு எதிரான குற்றம் மட்டுமல்ல; நமது சமூகத்தின் பாதுகாப்பையும் நீதியின் மீதான நம்பிக்கையையும் சோதிக்கும் மிகக் கடுமையான குற்றமாகும்.

பிஞ்சுக்குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும், கடமையும் உள்ள அமைப்புகள், மிக முக்கியப் பொறுப்பில் இருந்து அதை வழிநடத்தியவர்கள் அக்குழந்தைகளை இரக்கமற்று கைவிட்டதோடு மட்டுமல்லாமல் கொடும் குற்றவாளியை தொடர்ந்து காப்பாற்றியிருக்கிறார்கள் என்பது மன்னிக்கமுடியாத குற்றம்.  எனவே, இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு முழுமையான பாதுகாப்பும் நீதியும் உறுதி செய்யப்பட வேண்டும். குற்றத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புடைய எவராக இருந்தாலும், அவர்கள் எவ்வளவு செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தாலும், சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

தமிழ்நாடு அரசு இக்கொடூரமான குற்றத்தை தீவிர விசாரணைக்கு உட்படுத்தி குற்றவாளியை கைது செய்திருப்பது பாராட்டுக்குரியது. குற்றத்தின் தன்மையைப் பார்க்கும் போது இக்கொடூரமான குற்றத்தை விசாரிப்பதற்காக ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து,காலம் தாழ்த்தாமல் உடனடியாக குற்றவாளிகள் மற்றும் உடந்தையாக இருந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.  இன்னும் எவ்வளவு காலம் பெண்களும், குழந்தைகளும் இந்தக் கொடூரங்களை எதிர்கொள்ள நேருமோ என்று நினைத்தாலே நெஞ்சு நடுங்குகிறது. பெண்களின் பாதுகாப்பிற்கு ஒரு சமூகமாக நாம் என்ன
செய்யப் போகிறோம் என்கிற கேள்வியை ஒவ்வொரு முறையும் கேட்காமல் கடந்து செல்ல முடியவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.