ஆளுநர் உரையைப் படிக்காமல் ஓடிப்போவது ஆளுநருக்குத்தான் அவமானம்- ஜோதிமணி

 
ஜோதிமணி

பாஜகவின் ஏஜெண்டாக செயல்பட்டு வரும் ஆளுநர் ரவியின் வசதிக்காக தமிழ்நாடு மக்கள் தங்களது கலாச்சாரங்களையும், பண்பாட்டையும் மாற்றிக் கொள்ள முடியாது என கரூரில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கூறினார்.

jothimani

கரூர்  மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரூர் மாநகராட்சி பகுதியான ஜவகர் பஜார் கடை வீதி பகுதிகளில் மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, எம்பி ஜோதிமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி தொடர்ந்து இரண்டாவது முறையாக அவையை அவமதிப்பு செய்து ஆளுநர் உரையை வாசிக்காமல் சென்று விட்டார். பாஜகவின் ஏஜெண்டாக ஆளுநர் ரவி தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் உள்ள 8 கோடி  மக்களை அவமதிக்கும் நோக்கத்தில் ஆளுநர் ரவி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இதை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆளுநருக்குறிய மாண்புடன் ரவி செயல்பட தவறி விட்டார்.


ஆளுநர் வசதிக்காக தமிழ்நாடு மக்கள் தங்களது கலாச்சாரங்களையும், பண்பாட்டையும் மாற்றிக் கொள்ள முடியாது. இன்று தேசிய கீதம் முதலில் பாட வேண்டும் என்பார். நாளை ஆளுநர் உரையை இந்தியில் எழுதிக் கொடுக்க சொல்வார், இதையெல்லாம் தமிழ்நாடு அரசாங்கமும் தமிழ்நாடு மக்கள் செய்து கொடுக்க முடியாது என்றார். ஆளுநர் வைத்த சட்டங்களுக்கு எல்லாம் தமிழ்நாடு அரசாங்கம் மற்றும் தமிழ்நாடு மக்கள் ஆட முடியாது. தமிழக அரசியல் தொடர் தாக்குதலுக்கு ஆளுநர் மாளிகையை பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் ஆளுநர் உரையைப் படிக்காமல் ஓடிப்போவது ஆளுநருக்குத்தான் அவமானம். இதனால் தமிழ்நாடு அரசுக்கும், மக்களுக்கும் இழப்பு எதுவுமில்லை” என குற்றச்சாட்டினார்.