அடியாட்களுடன் வந்த காங். எம்எல்ஏ... ஆக்கிரமிப்பை அகற்றிய அதிகாரிகளுக்கு மிரட்டல்?

 
எமெல்

சென்னை வேளச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ அசன் மவுலானா ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேளச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ அசன் மவுலானாவுக்கு வியாசர்பாடி கிருஷ்ண மூர்த்தி நகரில்  4 ஏக்கர் காலி இடம் உள்ளது. இந்த இடத்துக்கு நடுவே சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 130 சதுர அடி பொது வழி இருந்தது. அதனை பொதுமக்கள் பயன்படுத்திவந்தனர். இந்நிலையில், அந்த வழியை யாரும் பயன்படுத்தக்கூடாது என சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சுற்றுச்சுவர் எழுப்பி அராஜகம் செய்தார் அசன் மவுலானா. இதனால் அப்பகுதி மக்கள் சுமார் 3 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

மேலும் இதுதொடர்பாக பொதுமக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், 136 சதுர அடியை இணைத்து அசன் மவுலானா கட்டிய சுற்றுச்சுவரை இடிக்க உத்தரவிட்டனர். இதனையடுத்து ஜேசிபி இயந்திரங்களுடன் சம்பவ இடத்துக்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள், சுற்றுச்சுவரை இடித்து அகற்றினர். அப்போது அடியாட்களுடன் வந்த காங்கிரஸ் எம்எல்ஏ அசன் மவுலானா, அதிகாரிகளை வேலை செய்யவிடாமல் விரட்டியடித்தார்.

அதுமட்டுமின்றி, ஆக்கிரமிப்பை அகற்றிய இடத்தில் குவியல் குவியலாக கழிவுகளை கொட்டி மக்கள் அவ்வழியே நடந்து செல்லமுடியாதபடி செய்தார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், காங்கிரஸ் எம்எல்ஏ அசன் மவுலானாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கும் அசன் மவுலானா கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. ஆக்கிரமிப்பை அகற்றிய மறுநாள் மண் சாலையை தார் சாலையாக மாற்ற மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதிக்கு வந்தனர். அவர்களை வேலை செய்யவிடாமல் அசன் மவுலானாவின் ஆதரவாளர்கள் விரட்டியடித்ததாக தெரிகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் போலீசாருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.