ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி நாளை காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்- மாணிக்கம்தாகூர்
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக எனது தலைமையில், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் முன்னிலையில் நாளை (25.09.2026) வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் அண்ணா சாலை தர்கா, தாரப்பூர் டவர் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம்தாகூர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக மாணிக்கம்தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பா.ஜ.க. அரசின் எதிர்ப்புக் குரலாக ஒலித்து வருகிற மக்களவை எதிர்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் தொடர்ந்து முன்வைத்து வந்த வாக்குத் திருட்டு மற்றும் தேர்தல் ஆணையத்தன் ஒருதலைப்பட்சமான செயல்பாடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மை என்பதை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் 10 மாத புலனாய்வுத் தரவுகள் நாட்டு மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் தவிர்த்து, தேர்தல் ஆணையத்தில் அங்கும் வகிக்கும் மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களான சுக்பீர்சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த 10 மாதங்களில் மட்டும் 14 முறை எழுத்துப்பூர்வமாக ஆட்சேபனைகளை பதிவு செய்துள்ளனர். ஆனால், அவர்களின் எதிர்ப்புகள் அனைத்தையும் அமித்ஷாவின் ஆணைக்கேற்ப தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தன்னிச்சையாக புறந்தள்ளியுள்ளார். ஞானேஷ்குமார் என்பவர் தலைமை தேர்தல் ஆணையராக இருந்தாலும் மூன்று தேர்தல் ஆணையர்களும் சமமான அதிகாரம் படைத்தவர்கள். மற்ற தேர்தல் ஆணையர்களை விட தலைமை தேர்தல் ஆணையருக்கு அதிக அதிகாரம் இல்லை.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் தேர்தல் விதிகளை மீறி படிவம் 6-ன் மூலமாக சட்டவிரோத மாற்றங்களை செய்து லட்சக்கணக்கான இளம் வாக்காளர்களின் பெயர்களை பதிவு செய்யாமல் அலைகழித்துள்ளனர். ஏறத்தாழ 12 கோடி வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது. 2024 தேர்தலில் பதிவு செய்யப்பட்ட 97 கோடி வாக்காளர்களில் இது ஏறத்தாழ 12.4 சதவிகிதமாகும். பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், எதிர்கட்சிகளுக்கும் இடையே 2 சதவிகித வித்தியாசத்தில் தான் தேர்தல் வெற்றி அமைந்தன. இந்த வகையில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை செய்துள்ளார்.தலைமை தேர்தல் ஆணையரின் நடவடிக்கை முற்றிலும் சட்டவிரோதமானது என மற்ற இரண்டு ஆணையர்களும் எச்சரித்த போதும், டெல்லியில் உள்ள தகவல் தொழில்நுட்பப் பிரிவு தன்னிச்சையாக மென்பொருளை கட்டுப்படுத்தி கள அதிகாரிகளான வாக்காளர் பதிவு அலுவலர்களின் அதிகாரத்தை பறித்து ஒட்டுமொத்த வாக்காளர் பட்டியல் தரவு தளத்தையும் முறைகேடாக கையாள முற்பட்டுள்ளது. இந்த செயல்பாடுகள் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் கைப் பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுவதை உறுதி செய்வதோடு, வாக்குத் திருட்டு என்பது மக்களுக்கு எதிரான குற்றம் என்பதோடு, அரசமைப்புச் சட்டத்தின் மீதான நேரடி தாக்குதல் என்றும், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., மற்றும் தேர்தல் ஆணையம் கூட்டு சேர்ந்து மிகப்பெரிய சதித் திட்டத்தை அரங்கேற்றியுள்ளது. இத்தகைய அநீதியிலிருந்து நீதி கிடைக்கும் என்கிற நம்பிக்கையை தலைவர் ராகுல்காந்தி வெளிப்படுத்தியுள்ளார். இதன்மூலம் உண்மையான நாட்டுப்பற்றை மீண்டும் உலகத்திற்கும் நிரூபித்துள்ளார்.
வாக்குரிமை என்பது மக்களின் அரசியலமைப்பு உரிமை. அந்த உரிமையை பாதுகாப்பதே ஜனநாயகத்தின் கடமையாகும். அரசியலமைப்பு சட்டம் 324 வழங்கிய ஜனநாயக வழிகாட்டுதலை தகர்த்து சுதந்திரமான தேர்தல் ஆணையத்தையே பா.ஜ.க. அரசு அவர்களுக்கு சாதகமாக முடக்கியுள்ளது. தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. கோடிக்கணக்கான இந்திய மக்களின் வாக்குரிமையை பறிக்கும் பாசிச சக்தியை தோலுரித்து ஜனநாயகத்தை காக்க திரு. ராகுல்காந்தி அவர்கள் நடத்தும் மக்கள் சந்திப்புகள் முழுவீச்சில் தொடரும். அவரது முயற்சிகள் நிச்சயம் வெற்றி பெறும். ஒன்றிய பா.ஜ.க. அரசு தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக வைத்துக் கொண்டு, சிறப்பு தீவிர திருத்தம் என்ற போர்வையில் ஜனநாயகத்தை படுகொலை செய்கிற தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக எனது தலைமையில், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் முன்னிலையில் நாளை (25.09.2026) வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் அண்ணா சாலை தர்கா, தாரப்பூர் டவர் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவில் ஜனநாயகத்தை காக்க தலைவர் ராகுல்காந்தி அவர்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு வலு சேர்க்கின்ற வகையில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் அணி திரண்டு வருகை தருமாறு அன்போடு வேண்டுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

