“கூட்டணி தொடர்பாக பொதுவெளியில் கருத்து கூற வேண்டாம்” - கட்சியினருக்கு காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தல்
கூட்டணி தொடர்பாக பொதுவெளியில் கருத்து கூற வேண்டாம் என கட்சியினருக்கு காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் கூட்டணி தொடர்பான ஊகங்களை தவிர்ப்பதோடு, பொதுவெளியில் கருத்து கூற வேண்டாம் என தங்கள் கட்சியினருக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தியுள்ளது. தேர்தல் உத்தி தொடர்பாக கட்சியின் கொள்கை மற்றும் தமிழ்நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு காங்கிரஸ் தலைமை உரிய நேரத்தில் சரியான முடிவை எடுக்கும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் கருத்து தெரிவித்துள்ளார்.
இதனிடையே டெல்லியில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, “தேர்தல் கூட்டணி குறித்து யாரும் பொதுவெளியில் பேச வேண்டாம் என ராகுல்காந்தி அறிவுறுத்தியுள்ளார். கூட்டணி குறித்து சிலர் சமூக வலைதளங்களில் ட்வீட் போடுவது, அறிக்கை வெளியிடுவது குறித்தும் அவர் வேதனை தெரிவித்தார். கூட்டணி தொடர்பாக அகில இந்தியத் தலைமை எடுக்கும் முடிவை தமிழ்நாடு காங்கிரஸ் பின்பற்றும்” என்றார்.


