அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் சர்க்கஸ் கோமாளி போல் ஆகிவிட்டது - திருநாவுக்கரசர் விமர்சனம்
அண்ணாமலையின் சாட்டை அடி போராட்டம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் விமர்சித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஞானசேகர் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தை கண்டித்து சாட்டையால் தன்னைத்தானே அடித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். சென்னையில் உள்ள தனது இல்லத்தில் ஏற்கனவே அறிவித்தது போல சாட்டையால் தன்னை தானே அடித்து போராட்டத்தில் ஈடுபட்டார். திமுகவை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை செருப்பு அணிய மாட்டேன் எனவும் சபதம் எடுத்துள்ளார்.
இந்த நிலையில், அண்ணாமலையின் சாட்டை அடி போராட்டம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் விமர்சித்துள்ளார். அண்ணாமலை அரசியல் படிப்பதற்காக லண்டன் சென்றார் என கேள்விப்பட்டேன். இப்போதுதான் தெரிகிறது அண்ணாமலை 'சர்க்கஸ்' படிக்க லண்டன் சென்று வந்துள்ளார். சர்க்கஸில் தான் கோமாளிகள் சாட்டையடித்து மக்களை மகிழ்விப்பர். ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், ஊர்வலம் என அரசியல் போராட்டங்களுக்கு எவ்வளவோ வடிவங்கள் உள்ளது. ஆனால், அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் சர்க்கஸ் கோமாளிபோல் ஆகிவிட்டது. கிண்டல், கேலியாக மக்கள் பார்க்கின்றனர். ஐபிஎஸ் படித்த மனிதர் தரமான அரசியலை முன்னெடுக்க வேண்டும். கோமாளி அரசியலை முன்னெடுக்க கூடாது என கூறினார்.