காங்கிரஸே காரணம்.. வாரிசு அரசியலால் மாநிலக் கட்சிகள் சுருங்கி வருகிறது - ஜே.பி.நட்டா..

 
jp nadda

மாநில கட்சிகள் பெரும்பாலும் வாரிசு அரசியல் கட்சியாகத்தான் உள்ளது என்றும், காங்கிரஸின் மோசமான ஆட்சியாலே மாநிலக் கட்சிகள் தோன்றியதாகவும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.  

கிருஷ்ணகிரி அருகே பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் குந்தாரப்பள்ளி கூட்ரோட்டில் மாவட்ட பாஜக அலுவலகத்தை, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெள்ளிக்கிழமை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து கட்சி அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்த அவர், 75 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் பாஜக கொடியை ஏற்றி வைத்தார். 

காங்கிரஸே காரணம்.. வாரிசு அரசியலால் மாநிலக் கட்சிகள் சுருங்கி வருகிறது - ஜே.பி.நட்டா..

இக்கூட்டத்தில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, "தமிழகத்தில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை.காங்கிரசின் மோசமான ஆட்சி காரணமாகவே மாநில கட்சிகள் தோன்றியது. மாநில கட்சிகள் பெரும்பாலும் வாரிசு அரசியல் கட்சியாக தான் உள்ளது. ஜம்மு - காஷ்மீர் முதல் தமிழகம் வரை பல மாநிலங்களில் உள்ள கட்சிகளில் வாரிசுகளின் வளர்ச்சியை தான் மையமாக கொண்டுள்ளது. வாரிசு அரசியலால் மாநில கட்சிகள் சுருங்கி வருகிறது.

மக்கள் அரசியலால் பாஜக வளர்ந்து வருகிறது. தமிழகத்திற்கு நல்லதொரு சிறந்த ஆட்சியை பாஜகவால் மட்டுமே தர முடியும். இளைஞர்கள், பெண்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் என அனைத்து தரப்பினரின் வளர்ச்சியை மட்டுமே கொள்கையாக கொண்ட கட்சி பாஜக. குறிப்பாக தமிழக வளர்ச்சிக்காக பாடுபடும் ஒரே கட்சி பாஜக தான்” என்று அவர் பேசினார்.