இனி குரூபிஸம் இல்லாமல் வேட்பாளர் தேர்வு... உள்ளாட்சித் தேர்தலுக்கு ஆயத்தமாகும் காங்கிரஸ்
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பில், வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு “மக்கள் சேவகன்” என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பில், வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு “மக்கள் சேவகன்” என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களின் தேவைகளை அறிந்து, அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. உள்ளாட்சி பிரதிநிதிகளாக வருங்கால இளைஞர் தலைவர்களை உருவாக்க காங்கிரஸ் முனைப்பு காட்டிவருகிறது. ஒவ்வொரு ஊரிலும் வலுவான, வெளிப்படையான மக்கள் தலைமையை உருவாக்குவோம் என காங்கிரஸ் உறுதிமொழி ஏற்றுள்ளது.
இத்திட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், “காங்கிரஸில் இனி குரூபிஸம் இல்லாமல் வேட்பாளர் தேர்வு செய்யப்படுவர். கள ஆய்வு, களப்பணி மூலம் தேர்வாகும் மக்கள் தலைவர்களுக்கே இனி உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்புள்ளது. தலைவர்கள் பரிந்துரைக்கும் நபர்களுக்கு சீட் என்ற நடைமுறை முடிவுக்கு வருகிறது” என்றார். அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

