ஈகோ என்ற கற்களால் கட்டப்பட்டது அல்ல நாடாளுமன்றம்- ராகுல்காந்தி

 
rahul gandhi

ஈகோ என்ற கற்களால் கட்டப்பட்டது அல்ல நாடாளுமன்றம், அது இந்திய அரசியலமைப்பின் மாண்பினால் கட்டப்பட்டது என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

rahul

இந்திய நாடாளுமன்றத்துக்கான புதிய கட்டடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைப்பதுதான் முறையும், மரபுமாகும். ஆனால், அதற்கு மாறாக, பிரதமர் நரேந்திர மோடியே திறந்து வைக்க முடிவு செய்துள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடியே திறந்து வைப்பதை கண்டித்தும், திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்காததை கண்டித்தும் 19 கட்சிகள் இவ்விழாவை புறக்கணிக்கின்றன.  மே 28ம் தேதி அன்று நடைபெற உள்ள புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது. இதேபோல்   திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிபிஐ, சிபிஎம், ஆர்ஜேடி, விசிக உள்ளிட்ட கட்சிகளும் நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. நாடாளுமன்ற புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டுவதாக இருந்தாலும் சரி, திறப்பு விழாவாக இருந்தாலும் சரி, பிரதமர் நரேந்திர மோடி மட்டும்தான் தகுதியானவரா? தாழ்த்தப்பட்ட, பழங்குடியின சமூகத்தவர் என்ற காரணத்தால், குடியரசுத் தலைவர் புறக்கணிக்கப்படுவதா? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிவருகின்றன.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழாவிற்கு குடியரசுத்தலைவரை அழைக்காதது, இந்திய அரசியலமைப்பின் உட்சபட்ச பதவியை அவமதிக்கும் செயல். ஈகோ என்ற கற்களால் கட்டப்பட்டது அல்ல நாடாளுமன்றம், அது இந்திய அரசியலமைப்பின் மாண்பினால் கட்டப்பட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார்.