பாஜக பெற்றதில் பாதியைக் கூட காங்கிரஸ் கட்சியால் பெற முடியவில்லை – வானதி சீனிவாசன் !

 
1

கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ”நாட்டின் 18-வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி நான்கு நாட்கள் ஆகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் வென்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. எதிரிகளே இல்லாமல் தேர்தலைச் சந்தித்து வந்த, நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு தவிர யாரும் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைத்ததில்லை.

18-வது மக்களவைத் தேர்தலில் வென்றிருப்பது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி. பாஜக மட்டும் தனித்து பெற்றிருப்பது 240 இடங்கள். ‘இண்டி’ கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து பெற்றிருப்பது 234 இடங்கள். இதில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பெற்ற 29, ஆம் ஆத்மி கட்சி பெற்ற 3, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெற்ற 2 என, 35 இடங்கள் காங்கிரஸை எதிர்த்து பெற்ற இடங்கள். ‘இண்டி’ கூட்டணிக்கு உண்மையிலேயே மக்கள் அளித்த தீர்ப்பு 199 இடங்கள் மட்டுமே.

கடந்த 2019 முதல் 2024 வரை காங்கிரஸ் மக்களவைத் தலைவராக இருந்த ஆதீர் ரஞ்சன் சௌத்ரி மேற்கு வங்கத்தில் தோல்வி அடைந்திருக்கிறார். ஆனால், ஏதோ பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை தோற்கடித்துவிட்டது போலவும், தாங்கள் ஆட்சி அமைத்து விட்டது போலவும் ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். 55 ஆண்டுகள் நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சியால், பாஜக பெற்றதில் பாதியைக் கூட பெற முடியவில்லை. காங்கிரஸ் அமைத்த ‘இண்டி’ கூட்டணி பெற்ற மொத்த இடங்களை விடவும், பாஜக தனித்து பெற்ற இடங்கள் அதிகம்.

பெரும்பான்மையை நெருங்க முடியாத அளவுக்கு தோல்வி அடைந்துள்ள காங்கிரஸ் உள்ளிட்ட ‘இண்டி’ கூட்டணி கட்சிகள், பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதை கொண்டாட வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காமல் இருக்கலாம். தேர்தலுக்கு முன்பே பாஜக அமைத்த கூட்டணிக்கு, நரேந்திர மோடி தான் பிரதமர் என்று முன்னிறுத்திய கட்சிகளுக்கு, மக்கள் வெற்றியைத் தந்திருக்கிறார்கள். எனவே, மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தொடர வேண்டும் என்பதுதான், இந்திய மக்களின் தெளிவான, உறுதியான தீர்ப்பு. மக்களின் தீர்ப்பை யாரும் மாற்ற முடியாது.

காங்கிரஸ் கட்சிக்கு குறிப்பாக, அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு, காங்கிரஸ் கட்சியும், “இண்டி’ கூட்டணியும் தேர்தலில் தோற்று விட்டது என்பதை யாராவது எடுத்துச் சொன்னால் நல்லது. ஏதோ தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று விட்டதை போல பேசிக் கொண்டிருக்கிறார். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பை கிண்டல் அடித்திருக்கிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடந்த மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தேர்தலுக்குப் பிந்திய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் கூறின. ஆனால், பாஜக தான் வெற்றி பெற்றது. மத்திய பிரதேசத்தில் பாஜக பெற்ற இமாலய வெற்றியை எந்த கருத்துக்கணிப்பும் கணிக்கவில்லை.

கருத்துக்கணிப்புகள் பொய்த்துப் போனது. அப்போது கருத்துக்கணிப்புகளை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி செய்த சதியா? தேர்தல் கருத்துக் கணிப்புகளை பாஜக நடத்தவில்லை. சொல்லப்போனால், கருத்துக் கணிப்புகளை நடத்திய நிறுவனங்களில் பெரும்பாலானவை, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவானவை. கருத்துக் கணிப்புகளை நடத்திய ஊடகவியலாளர்களில் பலர், ராகுல் காந்திக்கு நெருக்கமானவர்கள்.

ஏன் இப்படி கருத்துக்கணிப்புகளை வெளியிட்டீர்கள் என்று தனது நண்பர்களிடம்தான் ராகுல் காந்தி கேட்க வேண்டும். சிறுபான்மையினர் ஒட்டுமொத்தமாக பாஜகவுக்கு எதிராக, ஒரு கட்சிக்கு வாக்களித்துள்ளனர். இதனால்தான், உத்தரப்பிரதேசம் மேற்கு வங்கத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரம் தவிர மற்ற மாநிலங்களில் பாஜகவுக்கு எந்த பின்னடைவும் இல்லை. மேற்குவங்கம், கர்நாடகம், ஹரியானாவில் சிறிய சறுக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சறுக்கலையும் பின்னடையும் பாஜக நிச்சயம் சரி செய்யும். பாஜகவை பொறுத்தவரை இந்த தேர்தல் முடிவுகள் கொண்டாடித் தீர்க்க வேண்டிய வெற்றி. பாஜக தொண்டர்களும், நிர்வாகிகளும் இந்த தேர்தல் வெற்றியை உற்சாகமாகக் கொண்டாட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.