#BREAKING விஜயின் வேட்புமனுவில் சொத்துக்கணக்கு மறைப்பு- வருமான வரித்துறை விசாரிக்கக்கோரி மனு
த.வெ.க. தலைவர் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுவில், சொத்துக்கணக்கை மறைத்தது குறித்து வருமான வரித்துறை விசாரிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில், த.வெ.க. தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இரு தொகுதிகளிலும் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் இடம் பெற்றுள்ளதாகவும், பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்துக்கணக்கை மறைத்துள்ளதாகவும் கூறி, வியாசர்பாடியைச் சேர்ந்த பெரம்பூர் வாக்காளரான விக்னேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில், தனது சொத்து மதிப்பு, 115 கோடியே 13 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் எனக் குறிப்பிட்டிருந்த விஜய், திருச்சி கிழக்கு தொகுதிக்கான வேட்புமனுவில், 220 கோடியே 15 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் எனக் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி கிழக்கு தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில் குறிப்பிட்ட சொத்து மதிப்பை விட, பெரம்பூரில் தாக்கல் செய்த வேட்புமனுவில் குறைவாக காட்டியது குறித்து எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இது உண்மைத் தகவலை மறைத்ததற்கு சமம் என்பதால், விஜய் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் தெரிவித்துள்ள சொத்து விவரங்கள் முழுமையானவையா? உண்மையானவையா என விசாரிக்க, வருமான வரித்துறைக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த விசாரணை அறிக்கையை, தேர்தலுக்கு முன் பொதுமக்களுக்கு வெளியிடும்படி, சென்னை மற்றும் திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


