3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு கட்டாய மாறுதல் - பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு கட்டாய மாறுதல் செய்யப்படவுள்ளதாகவும், அனைத்து பணியாளர்கள் விவரங்களையும் EMIS தளத்தில் பதிவேற்றம் செய்யவும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், பள்ளி கல்வி இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே பதவியில் / ஒரே பணியிடத்தில் பணிபுரிந்துவரும் அலுவலகப் பணியாளர்களுக்கு கட்டாய மாறுதலும், அதனைத் தொடர்ந்து தகுதியுள்ள விண்ணப்பங்களின் அடிப்படையில் விருப்ப மாறுதல், மாவட்ட மாறுதல், பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் ஆகியவை EMIS இணையதளம் வழியாக நடத்திட திட்டமிடப்பட்டுள்ளதையும் அலுவலகப் பணியாளர்களின் (PA to DEO to Watch Man) விவரங்களை EMIS இணையதளத்தில் ஏராளமான பதிவுகள் விடுபட்டுள்ளதையும், விடுபட்டுள்ள பதிவுகளை 25.09.2026 க்குள் பதிவேற்றம் செய்து முடிக்கப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து வழங்கப்பட்ட காலகெடு முடிவுற்ற நிலையில் EMIS இணையதளத்தில் அலுவலகப் பணியாளர்கள் விவரங்களை மீள ஆய்வு செய்ததில், பணியாற்றிவரும் அலுவலகப் பணியாளர்களின் எண்ணிக்கையும், EMIS இணையதளத்தில் உள்ள பதிவுகளுக்கும் (Physical Count with EMIS Count) விடுதல் பதிவுகள் ஏராளமாக உள்ளது தெரியவருகிறது. சில பதவிகளில் அனுமதிக்கப்பட்ட பணியிடத்தில் பணியாற்றிவருபவர்களின் எண்ணிக்கையைவிட கூடுதலாக பதிவுகள் உள்ளதாக தெரியவருகிறது.
உதாரணமாக PA to CEO (HSS and HS) மற்றும் PA to DEO ஆகிய மூன்று பணியிடங்களும் வெவ்வேறு பணியமைப்பை (Service) கொண்டது. ஆனால் சில மாவட்டங்களில் PA to DEO என்ற பதவியில் 5,6,7 என்ற எண்ணிக்கையில் EMIS பதிவுமேற்கொள்ளப்பட்டுள்ளதாக பதிவிறக்கம் செய்யப்பட்ட விவரங்களின் அடிப்படையில் தெரியவருகிறது. இதேபோல் ஒவ்வொரு பணியிடத்திலும் வித்தியாசம் உள்ளது. எனவே, தங்களது மாவட்டங்களில் அரசால் அனுமதிக்கப்பட்ட முறையான பணியிடங்களில் பணியாற்றிவரும் அனைத்து அலுவலகப் பணியாளர்களின் (PA to DEO to Watch Man) விவரங்களும் EMIS இணையதளத்தில் கொண்டுவருவது கட்டாயம் என்பதை முதன்மைக் கல்வி அலுவலர்கள் நன்கு நினைவில் கொண்டு, விடுபட்டுள்ள அலுவலகப் பணியாளர்களின் விவரங்களை 01.10.2026 க்குள் பதிவேற்றம் செய்து முடித்து பின்வரும் படிவத்தில் விவரங்கள் அளிக்க முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அலுவலகப் பணியாளர்களுக்கான கட்டாய / விருப்ப மாறுதல்கள், மற்றும் பதவி உயர்வு பணிகள் EMIS இணையதளம் வாயிலாக மேற்கொள்ளப்படவுள்ளதால் இதில் எவ்வித சுணக்கமும் இன்றி செயல்பட வலியுறுத்தி தெரிவிக்கலாகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

