அதிமுக வேட்பாளர் வளர்மதி பணப்பட்டுவாடா செய்ததாக புகார்- சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர்

 
அதிமுக வேட்பாளர் வளர்மதி பணப்பட்டுவாடா செய்ததாக புகார்; சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர்

ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் வளர்மதியின் உறவினர் என கூறிக்கொண்டு வாக்காளர்களிடம் ஜி-பே நம்பர் பெற்ற குழுவினரை பொதுமக்கள் மற்றும் திமுகவினர் பிடித்துக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 5 மணி நேரத்துக்கு மேலாக வழக்கு பதிவு செய்யாமல் போலீசார் இழுத்தடிப்பதால் பாண்டிபஜார் காவல் நிலையத்தில் பரபரப்பு நிலவுகிறது.


ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 109 மற்றும் 113வது வார்டு ராமகாமத்துபுரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் அதிமுக சார்பில் பணம் கொடுப்பதற்காக வாக்காளர் பட்டியலை வைத்துக்கொண்டு அதிமுக நிர்வாகிகள் ஜி.பே எண் பெற்றதை அடுத்து,   பொதுமக்கள் மற்றும் திமுக தொண்டர்கள் இணைந்து அந்த நபர்களைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.இதில் சம்பந்தப்பட்ட விருத்தாசலத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி ஆவார். இவர் உட்பட குழுவினர் வீடு வீடாக சென்று பெயர் பட்டியலுடன் யு.பி.ஐ நம்பரும் கேட்டு பெற்றதாகவும், பணம் அனுப்புவது குறித்தும் பேசியதாக தெரிகிறது.  இதை கண்டறிந்த அப்பகுதி மக்கள் விசாரித்தபோது, தான் அதிமுக வேட்பாளர் வளர்மதியும் உறவினர் என தெரிவித்துள்ளார். இது குறித்து காவல்துறையில் புகார் அளித்ததற்கு, காவல்துறை மிக தாமதமாக வந்தார்கள் எனவும் திமுக தொண்டர்கள் ஆவேசமடைந்தனர். காவல் நிலையத்தில் திமுக மற்றும் அதிமுக தொண்டர்கள்,  வழக்கறிஞர்கள் குழுமியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

இதுகுறித்து பேசிய திமுக வழக்கறிஞர் அணியின் சென்னை மாவட்ட செயலாளர் தேவேந்திரன்,  ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக நிர்வாகிகளுடைய ஆட்கள் என கூறிக்கொண்டு, ஒவ்வொரு வீடாக சென்று ஜிபே எண்ணை கேட்டு பெற்றுக் கொண்டிருந்தார்கள், தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரியிடம் கூறி அவர்களை அங்கிருந்து விரட்டி விட்டோம், இதனைத் தொடர்ந்து 113 அ வட்டத்தில் ஆர் கே புரம் மற்றும் பார்த்தசாரதி புரத்தில், மீண்டும் அதிமுக சார்பாக ஒரு குழு வந்து பொதுமக்களிடம் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்வதற்காக அவர்களின் ஜி பே எண்ணை கேட்டுக் கொண்டிருந்தார்கள், இதற்காக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கொடுத்த பிறகும் அவர்கள் அங்கு வரவில்லை, அவர்கள் மொத்தம் ஆறு நபர்கள் இருந்தார்கள் அதில் ஒருவர் வேட்பாளரின் உறவினர் என கூறி மிரட்டினார், இவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, காவல்துறை அவர்களுக்கு சாதகமாக இருப்பதாக தெரிகிறது, இதுவரை சிஎஸ்ஆர் பதியப்படவில்லை, தேர்தல் பறக்கும் படையினர் நேரில் பார்த்ததாக புகார் கொடுத்தாலும் அதனை ஏற்க மறுக்கிறார்கள், அதிமுக சார்பாக ஆறு நபர்கள் வெளியூரை சார்ந்தவர்கள் இங்கு வந்து இங்க இருக்க கூடிய நபர்களை மிரட்டுகிறார்கள், ஆனால் காவல்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை நாங்கள் பல மணி நேரம் இங்கு காத்துக் கொண்டிருக்கிறோம் என கூறினார். தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழக பேச்சாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், தேர்தல் ஆணையத்தின் ஒருதலை பச்சம் என்பது உள்ளூர் காவல் நிலையம் வரை வந்துள்ளது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க காவல்துறையில் தயங்குகிறார்கள் என கூறினார். சிஎஸ்ஆர் மற்றும் எஃப் ஐ ஆர் பதிவு செய்யக்கோரி 10 மணிக்கு மேலாக திமுக நிர்வாகிகள் காவல் நிலையத்தில் காத்துக் கொண்டுள்ளனர்.