யூடியூபர் வி.ஜே.சித்து மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: காவல்துறை

 
vj siddhu

யூடியூபர் வி.ஜே.சித்து மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

சித்து

யூடியூபர் வி.ஜே. சித்துவுக்கு எதிராக சென்னை  போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமுறைகளை மீறி அஜாக்கிரதையாக செல்போனில் பேசிய படியே காரை இயக்கியதாக யூடியூபர் வி.ஜே. சித்து மீது சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த ஷெரின் என்பவர் புகார் அளித்துள்ளார். யூடியூபர் வி.ஜே. சித்து போக்குவரத்து விதிகளை மதிக்காமலும் அஜாக்கிரதையாகவும், செல்போனில் பேசியபடி வாகனத்தை இயக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுசம்பந்தப்பட்ட வீடியோ யூடியூப்பில் வெளியிட்ட நிலையில், அதனை பார்த்து மாணவர்கள், இளைஞர்கள் தவறான வழியில் செல்ல வழிவகுக்கும் எனவும் வீடியோவில் ஆபாச வார்த்தைகள், இரட்டை அர்த்த வசனங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறிய சித்து மீது தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் ஷெரின் புகார் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் வி.ஜே. சித்துவுக்கு எதிரான புகார் தொடர்பாக ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. மேலும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள வீடியோ 12.11.2023 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.