பெண்களை 'வாடி, போடி' என இஷ்டத்துக்கும் தீட்டும் தவெக நிர்வாகி சத்யா - பரபரப்பு குற்றச்சாட்டு
ஆரணி தவெக மாவட்டச் செயலாளர் சத்யா மீது பெண் நிர்வாகிகள் சிலர் பாலியல் தொந்தரவு புகார் கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளராக சத்யா உள்ளார். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் நிர்வாகிகளிடம் ஆபாசமாக பேசுவதாகவும், தவறாக நடந்து கொள்வதாகவும் அக்கட்சியின் பெண் நிர்வாகிகளே குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர். பெண் நிர்வாகிகளிடமிருந்து பணம் மற்றும் சொத்துக்களை எழுதி வாங்கி மிரட்டுவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். வெறும் புகார் தெரிவித்ததோடு மட்டுமில்லாமல் பாதிக்கப்பட்ட பெண் நிர்வாகிகள் ஆரணியில் உள்ள மாவட்ட செயலாளர் சத்யாவின் அலுவலகத்தை பூட்டி போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
மாற்றுக் கட்சியினர் இந்த புகார்களை தெரிவித்து இருந்தால் அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று சொல்லி இருக்கலாம். ஆனால் சொந்த கட்சியினரே அதுவும் பெண்களே புகார் தெரிவிக்கின்றனர். மாவட்டச் செயலாளர் சத்யா பெண் நிர்வாகிகளை `வாடி, போடி' என்று ஒருமையிலும், `கெட்ட' வார்த்தைகளாலும் இஷ்டத்துக்கு திட்டி பேசி வருவதாக கூறப்படுகிறது. சத்யாவிற்கு எதிரான போராட்டத்தின்போது, அலுவலக பேனரில் இடம்பெற்றிருந்த சத்யாவின் புகைப்படத்தை கருப்பு மை பூசி அழித்தும், அலுவலகத்தை இழுத்து மூடியும். `ஆரணியை விட்டு வெளியேறு' என்று ஆவேசமாக கோஷமிட்டதாலும் பரபரப்பான சூழல் நிலவியது.
இதுகுறித்து வடக்கு நகரப் பொறுப்பாளரான ராதா என்ற பெண் நிர்வாகி பேசும்போது, "மாவட்டச் செயலாளர் சத்யா என்னிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றார். என்னுடைய குடும்பச் சூழல் காரணமாக ஆரம்பத்தில் என்னால் வெளியில் சொல்ல முடியவில்லை. ஒருக்கட்டத்தில் பொதுச்செயலாளர் ஆனந்த்தையும் சந்தித்து புகார் கொடுத்துவிட்டு வந்தேன். அதன்பின்னர், என்னை கட்சிப்பதவியில் இருந்து விலகிச் செல்லுமாறு மிரட்டினார் மாவட்டச் செயலாளர் சத்யா. இதனால், மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைக்கும் முயன்றேன். இதையடுத்து, என்னுடைய பர்சனல் விவகாரங்களை எல்லோரிடம் தெரியப்படுத்தி என்னுடைய நடத்தையை தவறாக சித்திரித்து வந்தார். என்னுடைய பர்சனலை பற்றி பேசுவதற்கு யாருக்கும் உரிமையோ, தகுதியோ கிடையாது. இவரால் என் மாமியார் வீட்டிலும் எனக்கு ஏகப்பட்ட பிரச்னை வந்தது. இப்போதுதான் மற்ற பெண் நிர்வாகிகளும் சத்யாவுக்கு எதிராக வெளியே வந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த மாதிரி ஒரு ஆளு கட்சியில் இருக்கக் கூடாது. விஜய்க்கு ரொம்ப ரொம்ப அவமானத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த அளவுக்கு கேவலமான ஒரு ஜென்மம். ஏற்கெனவே, நான் முதலமைச்சரின் தனிப்பிரிவிலும் புகாரளித்துள்ளேன். போலீஸார் என்னை அழைத்து விசாரித்தபோது, `கட்சிரீதியாக கொண்டு போங்க' என்று சொல்லி அனுப்பிவிட்டார்கள்'' என்றார்

