முசிறி தவெக எம்.எல்.ஏ மீது பணமோசடி புகார்

 
ச்

முசிறி தொகுதியில் வெற்றி பெற்ற த.வெ.க வேட்பாளர் மீது பண மோசடி புகார் எழுந்துள்ளது.

திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்தவர் விக்னேஷ். பொறியாளரான இவர் தன் மனைவி சிவரஞ்சினியுடன் இணைந்து லால்குடி பகுதியில் CM பில்டர்ஸ் என்கிற பெயரில் கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் முசிறி தொகுதியில் த.வெ.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் திருச்சி கேகே நகர் பகுதியில் தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான லட்சுமி என்பவர் தங்களுடைய நிறுவன அலுவலகத்தை விரிவாக்கம் செய்வதற்காக கடந்த 2025 ஆம் ஆண்டு விக்னேஷை அணுகியுள்ளார். அப்பொழுது அவர் அலுவலகத்தை முழுமையாக பார்த்துவிட்டு அதை விரிவாக்கம் செய்வதற்கு உண்டான தொகை குறித்து அவரிடம் தெரிவித்து சென்றுள்ளார். அதன் அடிப்படையில் அந்த நிறுவனத்தின் சார்பில் வங்கியில் கடன் பெற்று பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

சுமார் 80 லட்சம் வரை வெவ்வேறு தவணையாக விக்னேஷிடம் லட்சுமி வழங்கியுள்ளார். ஆனால் ஆரம்பத்தில் சில பணிகளை மட்டும் செய்துவிட்டு பெரும்பாலான பணிகளை செய்யாமல் அப்படியே விட்டுவிட்டார். இது குறித்து விக்னேசை அணுகி லட்சுமி கேட்டபோது அவர் உரிய பதில் அளிக்காமல் இருந்து வந்துள்ளார். பணத்தை திருப்பி கேட்ட பொழுதும் அதை தர மறுத்துள்ளார் இதனால் அதிர்ச்சி அடைந்த லட்சுமி இது குறித்து திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தற்பொழுது விக்னேஷ் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் தனக்கு நீதி கிடைக்குமா என்கிற அச்சத்தில் லட்சுமி உள்ளார். சட்டப்படி விக்னேஷ் மீது நடவடிக்கை எடுத்து தங்களுடைய பணத்தை மீட்டு தர வேண்டும் என்பது லட்சுமி தரப்பின் கோரிக்கையாக உள்ளது.

இது குறித்து பேசிய லட்சுமி தரப்பு வழக்கறிஞர் கிஷோர், ஊழலை ஒழிப்பேன் நியாயமான ஆட்சியை வழங்குவேன் எனக் கூறி வெற்றி பெற்றுள்ள த.வெ.கவினர் மீது ஆட்சி பொறுப்பு ஏற்பதற்கு முன்பாகவே பல்வேறு குற்றச்சாட்டுகள் வருகிறது.வேட்பாளர்களை சரியான முறையில் தேர்ந்தெடுக்காததே இதற்கு முக்கியமான காரணம் எனக் கூறப்படுகிறது இதற்கு விஜய் உரிய விளக்கம் தர வேண்டும். விக்னேஷ் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.மேலும், காவல்துறையினர் தரப்பில் விக்னேசை விசாரணைக்கு அழைத்த பொழுது தான் ஒரு சட்டமன்ற உறுப்பினர் உரிய சம்மன் இல்லாமல் என்னால் விசாரணைக்கு வர முடியாது என தற்போது விக்னேஷ் கூறியுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர் இப்படி இருக்கும் பொழுது எப்படி நியாயம் கிடைக்கும் என தெரியவில்லை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் நாங்கள் நீதிமன்றத்தில் நாடி உரிய நீதியை பெறுவோம் என வழக்கறிஞர் கிஷோர் தெரிவித்தார்.