தவெக வேட்பாளர் மீது மகளிரணியைச் சேர்ந்த பெண் பாலியல் புகார்! புஸ்ஸி ஆனந்த் முன்னே நடந்த கொடூரம்
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாலியல் சீண்டல் அளித்த பூந்தமல்லி தவெக வேட்பாளர் குட்டி என்ற பிரகாசம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட தவெக பெண் நிர்வாகி திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் திருவூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா (43). இவர் திருவள்ளூர் தவெக தெற்கு மாவட்டம் மகளிர் அணி நிர்வாகியாக இருந்து வருகிறார். கடந்த ஆண்டு ஜூன் 8-ந் தேதி அன்று தவெக நிர்வாகியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி திருவள்ளுரில் நடைபெற்றது. அதில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் பூந்தமல்லி தவெக வேட்பாளரான குட்டி என்ற பிரகாசம் கலந்து கொண்டதாகவும், அப்போது அவர் திருமண வரவேற்பு மேடையில் தன் உடலில் நான்கு முதல் ஐந்து முறை தவறான இடத்தில் தொட்டு பாலியல் சீண்டல் அளித்ததாகவும் சங்கீதா புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக தனது கணவரிடம் கூறியதையடுத்து, தவெக மாவட்டச் செயலாளர் குட்டி என்ற பிரகாசமிடம் கேட்டபோது கூலிப்படை வைத்து தடையமே இல்லாமல் அழித்துவிடுவேன் என மிரட்டியதாகவும், இது தொடர்பாக கட்சி தலைமையிடத்தில் 6 மாதங்களுக்கு முன் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், அந்த புகார் மீது தன்னிடம் விசாரணை மேற்கொண்ட போது காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டாம் அவர் மீது நடவடிக்கை எடுப்பதாக கட்சி தலைமை கூறியது. இதனால் காவல் நிலையத்தில் புகார் அளிக்காமல் விட்டுவிட்டதாகவும், ஆனால் உறுதி அளித்தபடி அவர் மீது தவெக தலைமை நடவடிக்கை எடுக்காததால் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தற்போது புகார் அளித்துள்ளதாகவும் சங்கீதா தெரிவித்துள்ளார்.-

