பெருமாளை அவமதிக்கும் விதமாக பாடல் - நடிகர் சந்தானம் மீது பாஜக புகார்

 
ஸ் ஸ்

இந்து மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில்  "டிடி நெக்ஸ்ட் லெவல்" திரைப்படத்தில் கோவிந்தா கோவிந்தா என்ற வார்த்தையை தவறாக சித்தரித்து வெளியிட்ட  நடிகர்கள் சந்தானம் மற்றும்  ஆர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் சேலம் மாவட்ட  பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பில் சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Complaint Against Santhanam

சேலம் மாவட்டம் வலசையூர் பகுதியைச்  சேர்ந்த அஜித் (எ) அஜித் குமார் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். பாரதிய ஜனதா கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளராகவும் உள்ளார். இந்த நிலையில் இன்று தனது ஆதரவாளர்களுடன்சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு வந்து,  காவல் துறை அதிகாரிகளை சந்தித்து மனு அளித்துள்ளார். அந்த மனுவில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாக இருக்கும் ஆந்திராவில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலை இழிவுபடுத்தும் விதமாகவும், இந்து மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும், வழிபாட்டு முறையை சிதைக்கின்ற நோக்கத்திலும் "டிடி நெக்ஸ்ட் லெவல்"என்ற திரைப்படத்தில் கோவிந்தா,  கோவிந்தா என்ற முழக்கத்தை இழிவாக சித்தரித்து பாடியுள்ளனர்.  எனவே இதனைப்பாடிய  நடிகர்கள் சந்தானம், ஆர்யா, உள்ளிட்ட படத்தில் தொடர்புடைய அனைவர்  மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் அஜித் கூறும்போது , இந்தியாவில் புகழ்பெற்ற இந்துக்களின் புனித தலமாக விளங்கும் ஆந்திராவில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோவில் குறித்து நடிகர்கள் சந்தானம் , ஆர்யா ஆகியோர் நடித்து வெளிவர இருக்கும் "டிடி நெஸ்ட் லெவல்"திரைப்படத்தில் கோவிந்தா ,  கோவிந்தா என்ற பாடல் மூலம் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலையும், இந்து மதத்தையும்,இந்து மக்களின் மத உணர்வை புண்படுத்தி உள்ளனர், குறிப்பாக கோவிந்தா கோவிந்தா என்றால் கஷ்டம் தராதவர், பூமியை காப்பவர், பசுக்களை காப்பவர், ஜீவாத்மா நிறைந்த பரமாத்மா போன்றவர், தேவர்களால் துதிக்கும் தேவாதி தேவன், பசுக்களின் தலைவன், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவன், பூமியை தாங்குபவன் என பல்வேறு உன்னதமான பொருட்கள் உள்ளது ஆனால் "டிடி நெக்ஸ்ட் லெவல்" திரைப்படத்தில் வரும் பாடலில் பார்க்கிங்  காசு கோவிந்தா, பாப்கார்ன் டாக்ஸ் கோவிந்தா, ஹீரோயின் நடிப்பு கோவிந்தா,  கோவிந்தா என்ற பாடல் வரிகள் கொண்ட இந்த பாடலில் ஒட்டுமொத்த இந்து மக்களின் உணர்வுகளையும் அவமதித்ததுடன்,  வேண்டுமென்றே ஆன்மீகத்திற்கு விரோதமான உட்கருத்துடன் பட குழுவினர் உருவாக்கி உள்ளனர்.  எனவே இந்த படத்தில் வரும் பாடல் வரிகளை உடனடியாக நீக்க வேண்டும், இல்லையென்றால் இந்த திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடை செய்ய வேண்டும், இந்து மக்களின் மத உணர்வை புண்படுத்திய நடிகர்கள் சந்தானம் ஆர்யா உள்ளிட்டோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இந்தத் திரைப்படத்திற்கு தடை பெறுவோம் என தெரிவித்தார்.