நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் மீது பாலியல் புகார்

 
jani-master

பிரபல திரைப்பட நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் மீது வழக்கு பதிவு செய்த தெலங்கானா மாநில போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடன இயக்குனரான ஜானி மாஸ்டர் தனக்கு சில காலமாக பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக மற்றொரு பெண் நடன இயக்குனர் (21) போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில்  சென்னை, மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் படம் ஷீட்டிங்கில் இருந்தபோதும், நர்சிங்கியில் உள்ள தனது வீட்டிலும் பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில், ராயதுர்கம் போலீசார் ஜூரோ  எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். ஆனால் புகார் அளித்த  பெண் நடன இயக்குனர் நர்சிங்கியில் வசிப்பவர் என்பதால், மேல் விசாரணைக்காக நர்சிங்கி காவல் நிலையத்திற்கு  வழக்கை மாற்றினர். ஜானி மீது  376 (கற்பழிப்பு), குற்றவியல் மிரட்டல் (506) மற்றும்  காயப்படுத்துதல் (323) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு  செய்யப்பட்டுள்ளது. ஜானி மாஸ்டருக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு, ஒரு கல்லூரியில் ஒரு பெண்ணைத் தாக்கியதற்காக மேட்ச்சலில் உள்ள  நீதிமன்றம் ஜானி மாஸ்டருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்தது.   டோலிவுட்டின் சிறந்த நடன இயக்குனராக உள்ள ஜானி மாஸ்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. 

ஆந்திராவில் தேர்தலுக்கு முன்னதாக ஜனசேனா கட்சியில் இணைந்த ஜானி மாஸ்டர் ஜனசேனா கட்சி தலைவரும், துணை முதல்வருமான பவன் கல்யாணின் தீவிர ரசிகராவார்.  2024 தேர்தலில் ஜனசேனா கட்சி சார்பில் தேர்தல் பிரசாரத்திலும் பங்கேற்றார். அந்த கட்சி கூட்டணி வேட்பாளர்கள் சார்பில் ஜானி மாஸ்டர் தேர்தல் பிரசாரமும் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.