“கடத்தி சென்று மிரட்டுகின்றனர்”- மேயர் பிரியாவின் தந்தை மீது காதல் ஜோடி புகார்!

 
ச் ச்

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஓட்டேரி அடுத்த மங்களாபுரம் பகுதியைச் சேர்ந்த அபர்ணா(21) என்பவரும் அதே பகுதியைச் சேர்ந்த டேனியல் ஜோசப் (26) என்பரும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர் .. இதற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து வருவத நிலையில் கடந்த 23ஆம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் பெண்ணின் தந்தை விஜேஷ் காதலன் டேனியல் ஜோசப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் ஆபத்து இருப்பதாகவும், சென்னை மேயர் பிரியாவின் தந்தை ராஜன் தொடர்ச்சியாக மிரட்டி வருவதாகவும் கூறி காவல் ஆணையரகத்தில் தஞ்சமடைந்தனர்.

பின்னர் காதல் ஜோடி இருவரும் பாதுகாப்பு கேட்டு புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அபர்ணா, தனது தந்தை விஜேஸ் என்பவர் ஓட்டேரி 74 வது வார்டு முன்னாள் திமுக கவுன்சிலர் எனவும் தனது காதலை பிரிப்பதற்கு முயற்சி செய்து வருவதாகவும், மேலும் தனது கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் ஆதலால் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் எனவும் தெரிவித்தார். இதனையடுத்து அபர்னாவின் காதல் கணவர் டேனியல் ஜோசப்பேசுகையில் பள்ளி காலத்தில் இருந்தே நாங்கள் இருவரும் நண்பர்களாக பழகி வந்ததாகவும், பின்னர் கல்லூரி காலத்தில் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், அபர்ணாவின் தந்தை விஜேஷ் எங்களை பிரிக்க முற்பட்டதாகவும் இதனால் கடந்த 23ஆம் தேதி மேடவாக்கத்தில் உள்ள கோவிலில் தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்தார். மேலும், தனது மனைவி அபர்ணாவின் தந்தை விஜேஷ் ஓட்டேரி 74 ஆவது வட்ட திமுகவின் முன்னாள் கவுன்சிலர் என்பதால் தங்களை மிரட்டி வருவதாகவும் மேலும் தன் கிருத்துவ மதத்தை சார்ந்தவன் என்பதாலும் தனது மனைவி இந்து மதத்தை சார்ந்தவர் என்பதாலும் தங்களை பிரிப்பதற்காக தனது கட்சி அதிகாரத்தை பயன்படுத்தி, போலீசாரை வைத்து மிரட்டி வருவதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தாங்கள் திருமணம் செய்து கொண்ட பிறகு, தனது மனைவியின் தந்தை விஜேஷ் சென்னை மேயர் ப்ரியாவின் தந்தை ராஜனிடம் சொல்லி தனது தந்தையை கடந்த இரு தினங்களாக மேயர் பிரியாவின் தந்தை ராஜன் அழைத்துச் சென்று மிரட்டியதாகவும் இருவரையும் பிரித்து வைக்குமாறு கூறி மிரட்டி வருவதாகவும் தெரிவித்தார். தனது மனைவி அபர்ணாவின் தந்தையும் திமுக பிரமுகமான விஜேஷ் என்பவரிடமிருந்தும், மேயர் பிரியாவின் தந்தை ராஜன் என்பவரிடமிருந்தும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் இதனால் சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.