'தூக்கிவிடுவேன்' என மிரட்டிய பாஜக நிர்வாகி நாராயணன் திருப்பதி மீது புகார்

 
narayanan thirupathi

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய பயணியிடம் மோதலில் ஈடுபட்ட பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தென்னக ரயில்வேயிடம் புகார் அளித்துள்ளது. 

K balakrishnan

இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது டிவிட்டர் பக்கத்தில், “பாஜக செய்தி தொடர்பாளரும், துணைத்தலைவருமான நாராயணன் திருப்பதி ரயிலில் நேற்று பயணம் செய்து கொண்டிருந்த போது பிரதமர் மோடியை விமர்சித்ததற்காக சக பயணியர் ஒருவரை,“தூக்கிவிடுவேன், நான் ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர்” என்றெல்லாம் தொடர்ச்சியாக மிரட்டியிருக்கிறார். இதை சகித்துக் கொள்ள முடியாமல் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ், நாராயணன் திருப்பதியை தட்டிக்கேட்டுள்ளார்.

ஆனால், தன் தவறை உணர்ந்து திருத்திக்கொள்வதற்குப் பதிலாக ஆளுங்கட்சி என்ற அதிகாரத்தையும், ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் என்ற பொறுப்பையும் தவறாகப் பயன்படுத்தி காவல்துறையை ஏவி விட்டு கே. சாமுவேல்ராஜை ரயில்வே போலீஸார் ரயிலில் இருந்து இறங்க வேண்டுமென்று கட்டாயப்படுத்தியிருக்கிறார்.

தென்னக ரயில்வே காவல்துறை, இச்சம்பவத்தில் அத்துமீறி நடந்து கொண்ட காவல்துறையினர் மீதும், சக பயணிகளை மிரட்டிய நாராயணன் திருப்பதி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.