தவெகவிடம் ஆதரவு கேட்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி..!

 
1

புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதிக்கு வரும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு தேர்தல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது.

புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி கடந்த பொதுத்தேர்தலில் தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு 2 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தார். பின்னர், தனது தட்டாஞ்சாவடி தொகுதி பதவியை அவர் ராஜினாமா செய்ததால் இந்தத் தொகுதி காலியானது.

தற்போது தட்டாஞ்சாவடி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஆளுங்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணியின் சார்பில் அசோக் ஆனந்த் வேட்பாளராகக் களம் இறக்கப்பட்டுள்ளார்.

அதே சமயம், எதிர்க்கட்சியான திமுகவும் தங்களது வேட்பாளரை அறிவித்து தேர்தல் பணிகளைத் தீவிரமாகத் தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில், தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நேரடியாகப் போட்டியிடுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தட்டாஞ்சாவடி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், கட்சியின் மாநிலச் செயலாளரான சலீம் போட்டியிடுகிறார். அவர், புதுச்சேரியில் ஏற்கனவே காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை நேரில் சந்தித்துத் தனக்கு ஆதரவு தருமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, சென்னைக்கு இன்று சென்ற அவர், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான என்.ஆனந்தை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.

இந்தச் சந்திப்பின் போது, தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் போட்டியிடும் தனக்கும், தங்களது கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தவெக முழு ஆதரவை வழங்க வேண்டும் என்று கோரி தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்திடம் ஆதரவு கடிதத்தை வழங்கினார்.

தமிழ்நாட்டில் தவெக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் இடதுசாரி கட்சிகள் பங்கேற்காத சூழலில், புதுச்சேரியில் தவெகவிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு கோரியிருப்பது புதுச்சேரி மற்றும் தமிழக அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் தவெக அரசுக்கு இடதுசாரி கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு தந்து வரும் நிலையில், புதுச்சேரி இடைத்தேர்தலில் தவெகவின் பலத்தை நம்பிக் களம் இறங்கியுள்ளனர். தட்டாஞ்சாவடி தொகுதியில் தவெக தங்களுக்குப் பின்புலமாக இருந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், கூட்டணி பலத்துடன் இந்த இடைத்தேர்தலைச் சந்தித்து ஆளுங்கட்சியான என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்றும் சலீம் தவெக தலைமையிடம் கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விடுத்துள்ள இந்த அதிகாரப்பூர்வ ஆதரவு கோரிக்கைக்குத் தவெக தலைவர் விஜய் மற்றும் பொதுச்செயலாளர் என். ஆனந்த் ஆகியோர் என்ன முடிவெடுக்கப் போகிறார்கள் என்பது ஓரிரு நாட்களில் தெரியவரும்.