“திமுக- அதிமுக கூட்டணி உருவாக இருந்தது உண்மைதான்... அதனால்தான் வெளியேறினோம்”- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர்
கம்யூனிஸ்ட் கட்சிகளை அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் ஜி ஏ பேபி கூறியுள்ளார்.

234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழகச் சட்டப்பேரவையில் ஆட்சி அமைக்கத் தேவையான 118 என்ற பெரும்பான்மை என்ற எண்ணிக்கையை எட்ட, காங்கிரஸ் (5 இடங்கள்), இந்திய கம்யூனிஸ்ட் (2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (2) மற்றும் இந்திய முஸ்லீம் லீக் (2) உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்தன.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சி.பி.ஐ.எம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, “காங்கிரசைப் போல் அல்லாமல் திமுக தலைவர் ஸ்டாலினுடன் கலந்தாலோசித்த பிறகே எங்கள் முடிவை அறிவித்தோம். அவர்கள் தங்களோடு இணைந்து அதிமுகவிற்கு வெளியிலிருந்து ஆட்சியமைக்க ஆதரவு அளிக்குமாறு எங்களைக் கேட்டுக்கொண்டனர். பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இருந்ததால் இதனை இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்கள் அதிமுகவிற்கு ஆதரவாக அந்த எண்ணிக்கையை பெறுவதற்கு முன்பே, நாங்கள் த.வெ.கவிற்கு ஆதரவை அளித்துவிட்டோம். திமுகவுடனான எங்களது பயணம் தொடரும். அனைத்து மதச்சார்பற்ற கொள்கைகளிலும் நாங்கள் அவர்களைத் தொடர்ந்து ஆதரிப்போம். அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பது எங்களுக்குப் ஏற்றுக்கொள்ள முடியாதது. அதிமுக இப்போதும் பாஜக கூட்டணியில் இருப்பதால் அவர்களை ஆதரிப்பது ஏற்புடையதல்ல. இதனாலேயே திமுக உரிமை கோருவதற்கு முன்பே கூட்டணியில் இருந்து வெளியேறினோம்” என்றார்.

