காமன்வெல்த் போட்டி: 13 தங்கம் உள்பட 39 பதக்கங்களுடன் இந்தியா 4வது இடம்!

 
1

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்து வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் (ஆக.,1) இந்தியாவுக்கு மறக்க முடியாத நாளாகும். ஒரே நாளில் 7 தங்கம் உள்பட மொத்தம் 16 பதக்கங்களை இந்திய வீரர்கள் வென்று குவித்தனர். குத்துச்சண்டையில் மட்டும் 7 தங்கம், 3 வெள்ளியை இந்திய வீரர், வீராங்கனைகள் கைப்பற்றினர்.

இந்த நிலையில், காமன்வெல்த் போட்டியின் கடைசி நாளான இன்றும் இந்தியா பதக்க மழையை பொழிவார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. டிரேக் சைக்கிளிங், ஜூடோ ஆகிய விளையாட்டுகளில் இந்திய வீரர்கள் இன்று பங்கேற்றனர். டிரேக் சைக்கிளிங்கில் ஆண்களுக்கான 40 கி.மீ., பாயிண்ட் ரேஸில் இந்தியாவின் ஹர்ஷ்வீர் மற்றும தினேஷூக்கு ஏமாற்றமே மிஞ்சியது.அதேபோல, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜூடோ மகளிருக்கான 78 கிலோ பிரிவில் இஷ்ரூப் நராங்கும், ஆண்களுக்கான 100 கிலோ எடைப்பிரிவில் அவதார் சிங்கும், 100 கிலோவுக்கு அதிகமான எடைப்பிரிவில் யாஷ் கங்காஸூம் பதக்க வாய்ப்பை இழந்தனர். ஆண்களுக்கான டிரேக் சைக்கிளிங் 1000 நிமிடம் டைம் டிரைல் போட்டியின் இறுதிப்போட்டியில் ரொனால்டோ சிங் ஏமாற்றம் அளித்தார்.

பெண்களுக்கான பிரிவில் இந்தியாவின் லிஷா தாஸூக்கு 6வது இடமே கிடைத்தது. இதன்மூலம், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் இறுதிநாளில் இந்தியாவுக்கு ஒரு பதக்கம் கூட கிடைக்கவில்லை. இதனால், 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களுடன் இந்தியா பட்டியலில் 4வது இடத்துடன் காமன்வெல்த்தை நிறைவு செய்துள்ளது. ஆஸ்திரேலியா (68 தங்கம்), இங்கிலாந்து (27), கனடா (18) ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளது. 

2030ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டி இந்தியாவில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.