வராரு வராரு கள்ளழகர் வராரு... மே 1-ல் வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்; முழு கால அட்டவணை இதோ..!

 
1

கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு மே 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. அழகர் கோயிலில் இருந்து புறப்படும் கள்ளழகர் மீண்டும் அழகர் கோயில் திரும்பும் வரை, அழகர் எழுந்தருளும் முக்கிய இடங்கள் மற்றும் அதன் நேரங்கள் குறித்து அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஏப்.28 ஆம் தேதியும், திருத்தேரோட்டம் ஏப்.29ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

தொடர்ந்து மே 1ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வுகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள இருப்பதால், மதுரை மாநகர காவல் துறையும், மாநகராட்சி நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறையும் போதுமான ஏற்பாடுகளை செய்து வருகின்றன.

இந்நிலையில் ஏப்ரல் 29 ஆம் தேதி புதன்கிழமை மாலை 6.15 மணிக்கு அழகர் மலையில் இருந்து கள்ளழகர் தங்கப்பல்லக்கில் மதுரை நோக்கி புறப்படுகிறார். ஏப்.30ஆம் தேதி மதுரை மூன்றுமாவடி அருகே காலை 5.30 - 6.30 மணிக்குள் அருள்மிகு கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஏப்.30 ஆம் தேதி இரவு 11.00 - 11.59 மணிக்குள் தல்லாகுளத்திலிருந்து வைகை ஆற்றில் எழுந்தருள தங்கக்குதிரை வாகனத்தில் புறப்படுகிறார். மே 1 ஆம் தேதி அதிகாலை 5.35 - 5.55 மணிக்குள் தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றுக்குள் எழுந்தருள்கிறார் கள்ளழகர். அதன்பிறகு அன்று பிற்பகல் 12 மணியளவில் ராமராயர் மண்டபத்தில் கள்ளழகருக்கு தீர்த்தவாரி நிகழ்வு நடைபெறுகிறது.

மே 2 ஆம் தேதி காலை 11.30 மணியிலிருந்து பிற்பகல் 3 மணிக்குள் வண்டியூர் வைகை ஆற்றுக்குள் அமைந்துள்ள தேனூர் மண்டகப்படியில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு 11 மணிக்கு மேல் ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய நடைபெறுகிறது.

மே 4 ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு நடைபெறும் பூப்பல்லக்கு நிகழ்ச்சிக்கு பிறகு தல்லாகுளத்தில் உள்ள மன்னர் சேதுபதி மண்டபத்தில் இருந்து பூப்பல்லக்கில் அழகர் மலை நோக்கி புறப்படுகிறார். மே 5ஆம் தேதி காலை 10.40 - 11.10 மணிக்கு அழகர் மலை சென்றடைகிறார்.