கல்லூரி மாணவி தற்கொலை- எரிந்து கொண்டிருந்த அணைத்து போலீஸ் விசாரணை

 
கல்லூரி மாணவி தற்கொலை- எரிந்து கொண்டிருந்த அணைத்து போலீஸ் விசாரணை

குளித்தலை அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி எம்.புதுப்பட்டியில் கல்லூரி மாணவி தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், சுடுகாட்டில் பாதி எரிந்த உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர். 

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட எம். புதுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி (55) - தாயாரம்மாள். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் இளைய மகள் சுபா ஹரிணி (19), இவர் கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இன்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  

பெற்றோர்கள் உடனடியாக போலீசுக்கு தெரியப்படுத்தாமல் உடலை எரியூட்டுவதற்கு சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று எரிமேட்டில் வைத்து எரியூட்டி உள்ளனர். தகவல் அறிந்த லாலாபேட்டை போலீசார், சுடுகாட்டில் எரிந்து கொண்டிருந்த உடலை தண்ணீர் ஊற்றி அணைத்து உடலை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டதை மறைத்து குடும்பத்தினர் எரியூட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கல்லூரி மாணவி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.