“என் சாவுக்கு காரணம் இதுதான்..” தான் படித்த பள்ளிக்கே வந்து கல்லூரி மாணவர் மர்ம மரணம்
பட்டுக்கோட்டை அடுத்த மல்லிபட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்லூரி மாணவர் மர்ம மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த மல்லிப்பட்டினம் சின்னமனையைச் சேர்ந்த பெரியசாமி மகன் விஷ்ணு (வயது 21) என்ற இளைஞர். இவர் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி கட்டடத்தில் உள்ள தரையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இன்று காலையில் அந்த பகுதி வழியாக சென்றவர்கள் இதை பார்த்துவிட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் பள்ளிக்கு வந்து கொண்டிருந்த மாணவர்களும் இது குறித்து பள்ளி ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த பட்டுக்கோட்டை போலீஸ் டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் மற்றும் சேதுபாவாசத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு விஷ்ணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விஷ்ணு இறந்து கிடந்த இடத்தின் அருகில் உள்ள சுவற்றில் ‘என் சாவுக்கு காரணம் ஆங்கில ஆசிரியர் ஜே.பாபு’ என்று எழுதப்பட்டிருந்தது.
ஏற்கனவே கடந்த ஆண்டுதான் இதே பள்ளி ஆசிரியை ரமணி பள்ளி வளாகத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் அதே பள்ளி வளாகத்தில் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விஷ்ணு ஏற்கனவே இதே பள்ளியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பனிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு தற்போது மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இது குறித்து விஷ்ணுவின் மாமா கூறுகையில், விஷ்ணு பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது முதல் ரேங்க் எடுக்கும் மாணவர். எந்தவிதமான கெட்ட பழக்கமும் இல்லாதவர். இந்நிலையில் அவர் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் இறந்துள்ளார். அவருடைய சாவில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது என்றார்.


